ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் உச்சகட்டப் போர்!! அவசர அவசரமாக ஈராக் சென்ற அமெரிக்க ராணுவ மந்திரி !

US-defense-secretaryஅமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மாட்டிஸ் முன்னறிவிப்பில்லாத பயணமாக இன்று ஈராக் நாட்டுக்கு சென்றார். அங்கு முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் உச்சகட்டப் போர் – அமெரிக்க ராணுவ மந்திரி திடீர் பயணமாக ஈராக் சென்றார் பாக்தாத்: சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தபோது ஈராக்கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது.

தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி நாடாக அறிவித்து ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது. அமெரிக்க விமானப் படையின் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மோசூல் நகரம் சமீபத்தில் முழுமையாக மீட்கப்பட்டது. அதை தொடர்ந்து தீவிரவாதிகள் வசம் இருந்த மேலும் சில நகரங்கள் படிப்படியாக கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் அவர்கள் வசம் இருக்கும் கடைசி நகரமான தல் அபர் பகுதியை மீட்க தாக்குதல் நடத்துமாறு ஈராக் ராணுவத்துக்கு அந்நாட்டி பிரதமர் ஹைதர் அல்-அபாடி கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து, முன்னதாக மீட்கப்பட்ட மோசூல் நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தல் அபர் நகருக்குள் ராணுவ டாங்கிகளுடன் ஏராளமான வீரர்கள் புகுந்துள்ளனர்.

அங்கு பதுங்கியுள்ள சுமார் 2 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகளை தீர்த்துகட்ட உச்சகட்ட தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதர பகுதிகளில் இருந்து இந்த நகரம் கடந்த ஜூன் மாதம் துண்டிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த தகவலை ஈராக் பிரதமர் ஹைதர் அல்- அபாடி டெலிவி‌ஷனில் அறிவித்தார். அப்போது, ஐ.எஸ்.தீவிரவாதிகள் அனைவரும் சரணடைய வேண்டும். அல்லது செத்துமடிய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஈராக் ராணுவத்துக்கு துணையாக நகரின் தெற்கு எல்லைப்பகுதி வழியாக ஷியா இனத்தை சேர்ந்த போராளிகளும், வடக்கு எல்லைப்பகுதி வழியாக குர்திஷ் மற்றும் பெஷ்மெர்கா படையினரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் தல் அபர் நகரை மீட்பதற்கான போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அந்நகரில் சுமார் 300 சதுர கிலோமீட்டர் பகுதியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மாட்டிஸ் முன்னறிவிப்பில்லாத பயணமாக இன்று ஈராக் நாட்டுக்கு சென்றார்.

முன்னதாக, அமெரிக்காவில் இருந்து புறப்படும்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாட்டிஸ், ‘ஈராக்கில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முழுமையாக ஒழித்து, அந்நாட்டின் இறையாண்மையையும் அமைதியையும் நிலைநாட்டுவதுதான் நமது முக்கிய நோக்கம்’ என்று குறிப்பிட்டார். தலைநகர் பாக்தாத்தில் இன்று ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடியை சந்தித்துப் பேசும் மாட்டிஸ், தனிநாடு கேட்டும் போராடும் குர்திஸ்தான் பகுதிக்கும் செல்கிறார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை தீர்த்துக் கட்டும் பணியில் ஈராக் அரசுப் படைகளுடன் இணைந்து செயல்படுமாறு குர்திஸ்தான் பகுதி பிரதமர் மஸவுத் பர்சானி-யை அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, குர்திஸ்தான் பகுதியை தனிநாடாக அறிவிக்கும் சிறப்பு உத்தரவை குர்திஸ்தான் பிரதமர் மஸவுத் பர்சானி வரும் செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வெளியிடுவார் என தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளை ஒத்திவைத்து, ஐ.எஸ். தீவிரவாதிகளை தீர்த்துகட்டும் அரசுப் படைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு குர்திஸ்தான் பிரதமரை ஜிம் மாட்டிஸ் கேட்டுக் கொள்வார் என தெரிகிறது.

-athirvu.com