இலங்கையின் சமாதான முயற்சி அனைத்துலகத்தை கோபப்படுத்தியது

இலங்கையில் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அனைத்துலக சமூகம் கோபத்துக்கும் குழப்பத்துக்கும் உள்ளாகியிருந்தது. தீவிரவாதம் என்ற ஒரேயொரு விடயமே அவர்களுக்கு அதில் பிரச்னையாக இருந்தது. தீவிரவாதத்தை முழுமையாக விடுதலைப் புலிகளே பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே அவர்கள் கருதினர். ஆனால் அது நியாயமற்றது என அமெரிக்காவின் முன்னாள் உதவி அரச துறை செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சியில் நோர்வேயின் பங்களிப்புத் தொடர்பான மீளாய்வு அறிக்கையை ஒஸ்லோவில் வெளியிடும் நிகழ்வில் பேசும் போதே ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது, “அன்ரன் பாலசிங்கம் பயங்கரவாத அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருந்த போதும், அமெரிக்காவுக்கு அவரை அழைப்பதில் எனது நற்பெயரை பயன்படுத்திக் கொண்டேன்.”

“அன்ரன் பாலசிங்கத்தை அமெரிக்காவுக்கு அழைப்பதற்கான அனுமதியை இராஜாங்கத் திணைக்களம் வழங்கியிருந்தபோது இலங்கையில் இராணுவ நிலைகள் தாக்கப்பட்டன. இதனால் அன்ரன் பாலசிங்கத்தின் அமெரிககப் பயணத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குகள் அத்துடன் முடிவுக்கு வந்தன. அப்போது இலங்கை குடியரசுத் தலைவராக இருந்த சந்திரிகா குமாரதுங்கவுக்கும் தலைமையமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் போதிய ஒத்துழைப்பின்மை, தனிப்பட்ட விரோதம் ஆகியன நிலவியதுடன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இந்த விடயத்தில் போதிய அக்கறை கொள்ளாது மோசமான தீர்மானம் எடுத்தமை போன்றன இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளுக்குப் பெரிதும் முட்டுக் கட்டையாக அமைந்திருந்தன.” என்று ஆர்மிடேஜ் தெரிவித்தார்.

இலங்கை விடயத்தில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதிலும் இங்கு இடம்பெற்ற பிரச்னைகள், குழப்பங்கள் போன்றவற்றைத் தெளிவுபடுத்துவதிலும் நோர்வே பெரும் பங்காற்றியிருந்தது. இது தொடர்பில் நோர்வேயின் முயற்சியைத் தான் வியந்து பாராட்டுவதாகவும் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தெரிவித்துள்ளார்.

TAGS: