ரோஹிங்யா போராளிகள்- பாதுகாப்பு படையினர் மோதல் 71 பேர் பலி

130 missing in Rohingya boat sinkingமியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சி மலர்ந்திருக்கிறது.

அங்குள்ள ராகினே மாகாணத்தில் பவுத்தர்களுடன், வங்காள தேசத்தை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்களும் பெருவாரியாக வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர்.

ஆனால் அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மீது மியான்மர் பாதுகாப்பு படைகளும், சில பவுத்த மத குழுக்களும் கூட தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ரோஹிங்யா போராளிகள் ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது.

இந்த போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் ரோஹிங்யா முஸ்லிம் போராளிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்தன. ராணுவ நடவடிக்கைக்கு பயந்து ஏறத்தாழ 87 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்களது தாயகமான வங்காளதேசத்துக்கு சென்றுவிட்டனர்.

ஆனால் மனித சமூகத்தினருக்கு எதிரான குற்றங்களில் மியான்மர் ராணுவம் ஈடுபடுவதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு மலைப்பகுதியில் இருந்து ரோஹிங்யா முஸ்லிம்களை ராணுவம் அப்புறப்படுத்த முயற்சித்தபோது அங்கு மோதல்கள் மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கின. மாகாணம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது.

இந்த நிலையில் ராகினே மாகாணத்தில் நேற்று அதிகாலை 1 மணி முதல் 24 போலீஸ் சாவடிகளை குறிவைத்து ரோஹிங்யா போராளிகள் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தினர்.

அவர்களை எதிர்த்து போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். ஒரு ராணுவ தளத்தினுள் ஊடுருவவும் ரோஹிங்யா போராளிகள் முயற்சித்தனர்.

இந்த மோதல்களில் மொத்தம் 71 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 12 பேர் பாதுகாப்பு படையினர். மற்றவர்கள் போராளிகளும், பொதுமக்களும் ஆவர்.
நேற்றைய மோதல்கள் தொடர்பாக ராணுவம் கூறுகையில், “ரோஹிங்யா போராளிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் போராளிகள் தரப்பில் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. மாங்டாவ் என்ற இடத்தில் போலீஸ் நிலையம் மீதும் ரோஹிங்யா போராளிகள் தாக்குதல் நடத்தினர்” என்றார்.

மியான்மர் அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், “ராணுவ தளத்தினுள் புகுந்து ரோஹிங்யா போராளிகள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதனால் ராணுவத்தினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்” என கூறப்பட்டுள்ளது.

-dailythanthi.com