இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இந்திய அதிகாரிகள் இரகசியமாக சந்தித்திருந்தனர். அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதில் இந்தியா முக்கிய பாத்திரம் வகித்தது. இவ்வாறு நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரும் அந்நாட்டின் சுற்றாடல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்யஹய்ம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் பற்றிய மிகப் பெரிய தகவல் களஞ்சியமான அறிக்கையை வெளியிட்ட பின்னர், தனது செயலகத்தில் வைத்து இந்திய ஐ.என்.என்.எஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியின் போதே எரிக் சொல்யஹயம் போர் நிறுத்த உடன்பாட்டில் இந்தியாவின் பங்கு பற்றிய பல இரகசியங்களை வெளியிட்டுள்ளார்.
2002 பெப்ரவரியில் போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளை இந்திய அதிகாரிகள் இரகசியமாக சந்தித்துள்ளனர். ஆனால் இந்தச் சந்திப்பு எங்கே நடந்தது என்றோ இருதரப்பிலும் சந்திப்புகளில் பங்கு பற்றியவர்கள் யார் என்பது பற்றியோ தகவல்களை வெளியிட சொல்யஹய்ம் மறுத்துவிட்டார். இது உண்மையானால், முன்னாள் இந்திய தலைமையமைச்சர் ராஜீவ்காந்தி கொலையின் பின்னர் 1992-ல் விடுதலைப் புலிகளை புதுடெல்லி தடை செய்த பின்னர், இந்திய அதிகாரிகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம் பெற்ற முதலாவது சந்திப்பாக இருக்கும்.