அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான பிடியை இறுக செய்தது. ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டி அமெரிக்கா அந்நாட்டிற்கு வழங்கும் உதவியை நிறுத்தி வைத்து உள்ளது.
பாகிஸ்தானுக்கு அடுக்கடுக்காக நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிகாரிகளின் எச்சரிக்கையானது இருந்து வருகிறது.
டொனால்டு டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா வான்வழி தாக்குதலை தொடங்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா, பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து பொருள் மற்றும் நிதி உதவியை நாடவில்லை, அமெரிக்கா நம்பிக்கையுடனும், மரியாதையுடன் எங்களை நடத்த வேண்டும் என அமெரிக்க தூதரிடம் வலியுறுத்தினார். இருப்பினும் அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிரான செய்தியானது தொடர்ந்த வண்ணமே உள்ளது.
முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் சகோதரரும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஸ் செரீப் அமெரிக்க உதவிகளுக்கு பாகிஸ்தான் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என கூறிஉள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் உதவி வேண்டும் என்றால் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் உதவி வேண்டும் என்றால் அந்நாடு ஹக்கானி நெட்வோர்க், தலிபான் போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
“பாகிஸ்தான் உளவுத்துறைக்கும், பயங்கரவாத இயக்கங்களுக்கும் இடையே நீண்ட காலை தொடர்பு உள்ளது. இந்தநிலையானது ஒரே நாளில் மாறிவிடும் என நாங்கள் நினைக்கவில்லை, காலப்போக்கில் மாற்றங்களை எதிர்பார்க்கிறோம்,” என பெயரை வெளியிட விரும்பாத டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறிஉள்ளார்.
-dailythanthi.com