அரசு பொறுப்புக்கூறலில் இருந்து பின்வாங்கவில்லை : இலங்கைக்கே உரிய பாணியில் அது நிறைவேற்றப்படும்

arasuபொறுப்புக்கூறலில் இருந்து அரசு பின்வாங்கவில்லை என்றும், அதற்குரிய ஏற்பாடுகள் இலங்கைக்கே உரிய பாணியில் மெதுவாக நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இறுதிப்போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதில் இலங்கை அரசு பின்வாங்குகின்றது என அனைத்துலக மட்டத்தில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொறுப்புகூறலுக்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அரசியல் சூழ்நிலை, இலங்கையின் சுயாதீனம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இலங்கைக்குப் பொருத்தமான முறையிலேயே விசாரணை இடம்பெறும் என சர்வதேச சமூகத்திடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

இது விடயத்தில் அவசரப்பட முடியாது. கலக்கமடையவும் கூடாது. வேகமான பயணத்தின் முடிவில் தீர்வு இருக்காது. எனவேதான் இந்த அரசின் பயணம் மெதுவாக இருக்கின்றது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஒரு நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ தீர்வைக் கண்டுவிட முடியாது. எப்படியிருந்தபோதிலும் தீர்வை நோக்கி நகர்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிரேசிலுக்கான தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்புகளால் தொடுக்கப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு பற்றி ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்லை. பத்திரிகைகளிலேயே குறித்த தகவலை நான் பார்வையிட்டேன்.

எனினும், இது குறித்து தேடிப் பார்ப்போம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.

-tamilwin.com

TAGS: