ஈழத் தமிழரின் இன்றைய தேவை உறுதியான தலைமை

vikneswaran-with-Sambanthanசில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர்கள், தமது தலைவர் என்று எவரையாவது குறிப்பிட்டால் அது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையே குறிப்பதாக அமைந்திருந்தது.

அந்த அளவுக்கு ஒட்டு மொத்தத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு தலைவராக அவர் காணப்பட்டார்.

தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களிலும் பிரபாகரனால் நியமிக்கப்பட்டவர்களே பங்குபற்றினார்கள். புலிகளின் தலைமைக்கு அந்த அளவுக்கு அன்று மதிப்பு வழங்கப்பட்டது.

பிரபாகரன் தமது இளவயதிலேயே புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். மிக நீண்ட காலமாக வேறு எவராலும் அசைக்க முடியாத நிலையில் அந்தப் பதவியில் அமர்ந்திருந்தவர்.

அவரது நேர்மையும் கொள்கைப் பற்றுறுதியும், இனத்தின் மீது கொண்ட வாஞ்சையும் உலகத் தலைவர்களில் ஒருவராக அவரை அடையாளம் காட்டின.

தமிழர்களது தலைமைத்துவத்துக்கு உதாரணம் பிரபாகரன்

பிரபாகரனுக்குப் பிறகு உறுதியானதொரு தலைமை ஈழத்தமிழர்களுக்கு வாய்க்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

உலகத் தலைவர்களின் வரலாற்றை நாம் புரட்டிப் பார்த்தால் அவர்கள் தமது திறமையாலும் உழைப்பாலும் தலைமைப் பதவியை எட்டிப் பிடித்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

ஓர் இனத்தின் தலைமைத்துவம் என்பது வெறுமனே அரசியலை மட்டும் மையமாகக் கொண்டதல்ல. ஆனால் காலமாற்றத்தின் காரணமாக அரசியல் தலைவர்களே மக்கள் தலைவர்களாக மாறியுள்ளனர்.

இந்த வகையில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களின் தலைவராக இரா.சம்பந்தன் விளங்குகின்றார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய நான்கு கட்சிகளின் இணைப்பில் உருவாக்கப்பட்டது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

கூட்டமைப் பின் தலைவர் என்ற வகையில் சம்பந்தன் தமிழர் தலைவராகக் கருதப்படுகின்றார்.தற்போது ஒரு பிரிவினர் சம்பந்தனின் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

சம்பந்தன் ஒரு பலவீனமான தலைவராகவே இவர்களால் சித்தரிக்கப்படுகின்றார். இதேவேளை கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரும் சம்பந்தனைத் தரக் குறைவாக விமர்சித்து வருகின்றனர்.

இத்தகையவர்கள் இன்னமும் கூட்டமைப்பில் ஒட்டிக் கொண்டிருப்பது நியாயமான தல்ல.அண்மைய நாட்களாகவே ஈழத் தமிழர்கள் மத்தியில் மாற்றுத் தலைமை என்ற பேச்சு அடிபட்டு வருகின்றது.

ஆனால் அதற்குத் தகுதியான ஒருவர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஏதோவொரு வேகத்தில் ஒரு சிலர் சீ.வி.விக்னேஸ்வரனின் பக்கம் தமது சுட்டுவிரலை நீட்டுகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி விக்னேஸ்வரனுக்கு உண்டா? என்பதை நினைத்துப் பார்ப்பதற்கு இவர்கள் மறந்து விட்டனர்.

தற்போது தமிழர்கள் இருக்கின்ற சூழ்நிலையில் இளமையும், நல்ல உடல் நலமும் அனைவரையும், அணைத்துச் செல்லக்கூடிய மனப்பாங்கும் உள்ள ஒருவரே தேவைப் படுகின்றார்.

தலைக்குனிவை ஏற்படுத்தும் வடமாகாண சபையின் செயற்பாடுகள்

தற்போது வடக்கு மாகாண சபையில் இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் தமிழர்களுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தக் கூடியவை.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முதலமைச்சர் பதவியில் சீ.வி.விக்னேஸ்வரனை அமர்த்தியது முதலாவது தவறு.

அவரைக் கட்டுப்படுத்தாது தன்னி்ச்சையாகச் செயற்படுவதற்கு அனுமதித்தமை இரண்டாவது தவறு.

மாகாணசபையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது உடனடியாக அதில் தலையிடாது ஒதுங்கி நின்றமை மூன்றாவது தவறு.

இதன் பின்னர் வடக்கு முதலமைச்சர் தமது எண்ணம் போன்று செயற்பட அனுமதித்தமை நான்காவது தவறு.

உடனடியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு அமைதியாக இருப்பது ஐந்தாவது தவறு.

இவ்வாறு தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தந்தை செல்வா போன்ற தன்னலமற்ற தலைவர்களைக் காண்பது அரிது. அவர், தாம் சார்ந்த இனத்துக்காகவே வாழ்ந்தார். சொத்துக்கள் யாவற்றையும் இழந்தார். ஈழத் தமிழர்கள் உள்ளவரை செல்வாவின் நாமம் வாழும்.

பொழுதுபோக்க அரசியலில் ஈடுபடுவது போன்ற போக்கில் ஒரு சிலர்

ஒரு சிலர் பொழுதைப் போக்குவதற்காகவே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். தம்மைத் தலைவர்களாக உருவாக்கிக் கொள்வதற்கும் இவர்கள் துடிக்கின்றனர்.

மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அதில் இலாபம் சம்பாதிப்பதுதான் இவர்களின் நோக்கமாகும். இவர்கள் தம்மை மனதில் கொண்டுதான் மாற்றுத் தலைமை தொடர்பாகவும் கதைக்கின்றனர்.

ஆனால் மக்கள் இவர்கள் தொடர்பாக நன்கு அறிந்து கொண்டதால் இவர்களது எண்ணம் ஒரு போதுமே நிறைவேறப் போவதில்லை.

தலைவர்களாக மதிக்கப்பட்டவர்கள் ஏதோ ஒரு வகையில் தியாகம் செய்தவர்களாகவே காணப்படுவார்கள்.

ஒருவரது தியாகம் தான் அவரது தலைமைத்துவப் பண்புகளை வெளிக்காட்டி நிற்கின்றது. இவர்களில் சிலர் தாம் சார்ந்த மக்களுக்காகத் தமது உயிரையே தியாகம் செய்திருக்கின்றனர்.

இனத்துக்காக உழைக்கும் தலைவர்கள் தான் இன்று ஈழத் தமிழர்களுக்கும் தேவைப்படுகின்றனர்.

அவர்களை இன்னல்களிலிருந்து மீட்டெ டுக்கத்தக்க உறுதியான தலைமை தான் இன்றைய தேவையாகும்.

-tamilwin.com

TAGS: