இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும். நிரந்தர அரசியல் தீர்வே இந்த நிலைமையை ஏற்படுத்தும்.
எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்
இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது’ எனவும் அவர் வாக்குறுதியளித்தார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு கொழும்பில் பிரதமரின் உத்தியோகபூர்வமான செயலகமான அலரி மாளிகையில் நேற்று மாலை ஆரம்பமானது.
நேற்றும் இன்றும் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்றுப் பிற்பகல் தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதையடுத்து, அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.
நேற்று முதலாம் நாள் கருத்தரங்கு நிறைவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இராப்போசனத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு, ஐ.நா. தீர்மானம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தன் எடுத்துரைத்தார்.
சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.
சந்திப்பின் நிறைவில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை சுஷ்மா சுவராஜ் தெளிவுபடுத்தினார்.
இந்தச் சந்திப்பில் சுஷ்மா சுவராஜுடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோரும் பங்கேற்றனர்.