சியோல், உலகளாவிய எதிர்ப்பு, ஐ.நா. பொருளாதார தடைகள், சர்வதேச உடன்பாடுகள் என எதையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை படைத்த ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது.
2006-ம் ஆண்டு முதல் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி அணுகுண்டை விட பல மடங்கு சக்தி கொண்ட ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. (ஹைட்ரஜன் குண்டு என்றபோதும் அது கணக்கில் அணுகுண்டு சோதனையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது).
கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவை தாக்கும் வல்லமை படைத்த 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது. இதனால் அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடையை விதித்தது. அதற்கு மத்தியிலும் கடந்த 29-ந் தேதி மேலும் ஒரு ஏவுகணையை அந்த நாடு ஏவி சோதித்தது. அது ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் மீது பறந்து சென்று, கடலில் போய் விழுந்தது. இது ஜப்பானை அதிர வைத்தது.
6-வது அணுகுண்டு சோதனை
இந்த நிலையில், 6-வது முறையாக வடகொரியா நேற்று அணுகுண்டு சோதனை நடத்தியது. இந்த சோதனை, கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையைவிட வலிமை வாய்ந்த சோதனையாக அமைந்தது.
இந்த சோதனை, கில்ஜூ கவுண்டியில் நடத்தப்பட்டது. அங்குதான் புங்கியே-ரி அணு ஆயுத சோதனை நடத்துமிடம் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
நிலநடுக்கம்
இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை, கடந்த ஆண்டு நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையை விட 9.8 மடங்கு அதிக வலிமை வாய்ந்த செயற்கை நிலநடுக்கத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானதாக தென் கொரியா கூறுகிறது. ஆனால் 6.3 புள்ளி அளவில் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
பெரும் வெற்றி என அறிவிப்பு
6-வது முறையாக நடத்தியுள்ள அணுகுண்டு சோதனை பெரும் வெற்றி கண்டிருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.
தொலைதூர ஏவுகணையில் பொருத்தி அனுப்ப ஏற்ற மிக சிறிய அளவிலான ஹைட்ரஜன் அணுகுண்டினை உருவாக்கி உள்ளதாக வடகொரியா அறிவித்த சில மணி நேரத்தில் இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை அமைந்திருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது.
இதுபற்றி சர்வதேச ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “வடகொரியாவின் கூற்றை மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் அணு ஆயுத வல்லமை மேம்பாடு அடைந்திருப்பது தெளிவாகி உள்ளது” என்று கூறினர்.
ஜப்பான் கடும் கண்டனம்
வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி டாரோ கோனோ கருத்து கூறும்போது, “வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியதை உறுதி செய்கிறோம். இது குறித்து பீஜிங்கில் உள்ள வடகொரிய தூதரகத்திடம் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.
மேலும் இந்த அணுகுண்டு சோதனை மன்னிக்க முடியாத ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார்.இந்த சோதனையை தொடர்ந்து வடகொரியா மீதான சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-dailythanthi.com
இவன் கிறுக்கனா? உலகின் கடல் ஆராய்ச்சி இன்னும் முழுமை பெறவில்லையே . அதில் வெற்றி காண வேண்டியதுதானே .