அமெரிக்கா அல்லது அதன் கூட்டணி நாடுகள் மீது வடகொரியா உண்டாக்கும் அச்சுறுத்தல் மிகப்பெரிய ராணுவ பதிலடி மூலம் சந்திக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் அண்மைய அணு ஆயுத சோதனைக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்புடன் நடத்திய தேசிய பாதுகாப்பு கூட்டத்துக்கு பிறகு மேற்கூறிய கருத்தை ஜேம்ஸ் மேட்டிஸ் கூறினார்.
முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றின் மீது ஏற்றிச் செல்லக்கூடிய அணு ஆயுதம் ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வட கொரியா அறிவித்தது.
அணு குண்டைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்தது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச கண்டனத்தை பெற்றது.
ஐநா அமைப்பு விதித்துள்ள தடைகளையும், சர்வதேச அழுத்தத்தையும் மீறி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ள வடகொரியா, அமெரிக்க பெருநிலப்பரப்பை சென்றடையக்கூடிய திறன் படைத்த ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு வெளியே பத்திரிகையாளர்களிடம் பேசிய பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ், அமெரிக்காவுக்கு தன்னையும், தனது கூட்டணி நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றையும் தற்காத்துக் கொள்ளும் வல்லமை உள்ளது என்று தெரிவித்தார்.
”குவாம் உள்ளிட்ட அமெரிக்க பிராந்தியங்களுக்கோ அல்லது எங்களின் கூட்டணி நாடுகளுக்கோ ஏதாவது அச்சுறுத்தல் உண்டானால், அது பெரும் ராணுவ பதிலடி மூலம் சந்திக்கப்படும்” என்று ஜேம்ஸ் மேட்டிஸ் குறிப்பிட்டார்.
அண்மைய மாதங்களில் பல ஏவுகணை சோதனைகளை வட கொரியா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமையன்று, வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது. -BBC_Tamil