நாடற்ற ரோஹிஞ்சா அகதிகளால் நிரம்பி வழியும் வங்கதேசம்

rohing1

மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வரும் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 35,000க்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசம் வந்துள்ளனர்.

மியான்மரின் ரக்கீன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையின் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதியில் இருந்து 123,000க்கும் அதிகமான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிஞ்சா தீவிரவாதிகள் போலீஸார் மீது நடத்திய தாக்குதல்,மோதலுக்கு வழிவகுத்தது.

இதற்குப் பதிலடியாக மியான்மர் ராணுவம் நடத்திய எதிர்ப்பு தாக்குதலின் காரணமாக, கூட்டம் கூட்டமான ரோஹிஞ்சா பொதுமக்கள் தங்களது கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

சமீபத்தில் வங்கதேசம் வந்துள்ள ரோஹிஞ்சா அகதிகள் எப்போது வந்தனர் என்பது சரியாக தெரியவில்லை என்றும் ஆனால், உணவு மற்றும் தங்குமிடம் தேவைப்படும் புதிய வருகையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ளது என்றும் ஐ.நா கூறியுள்ளது.

ஐ.நாவின் இரண்டு முக்கிய முகாம்கள் தற்போது அகதிகளால் நிரம்பி வழிவதால், திறந்தவெளிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களிலும், சாலையோரத்திலும் மக்கள் தங்கியுள்ளனர் என ஐ.நாவின் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

பலருக்கு உடனடியாக உணவும், தண்ணீரும் தேவைப்படுகிறது.

“எங்கள் பகுதியில் தூப்பாக்கிச் சூடு நடந்தபோது, நாங்கள் மலைக்குத் தப்பி சென்றோம். ராணுவம் எங்கள் வீடுகளுக்குத் தீ வைத்தது” என் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் வங்கதேசம் வந்துள்ள மியான்மரை சேர்ந்த விவசாயி சலீம் உல்ஹா.

“ஒரு அதிகாலை நேரத்தில் எங்களுக்குப் படகு கிடைத்தது. எனது அம்மா, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இங்கு வந்தேன். 25 பெண்கள் உட்பட நாங்கள் வந்த படகில் 40 பேர் இருந்தனர்“ என்கிறார் சலீம் உல்ஹா.

ரக்கீன் பகுதியில் சண்டை நீடிப்பதாகத் தெரிகிறது என ஐ.நாவின் ஒரு களநிலைமை அறிக்கை கூறுகிறது. வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மியான்மர் பகுதியில் குறைந்தது 15 இடங்களில் புகை மேலேழும்பி வருவதைக் காண முடிந்தது.

ரக்கீன் பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான புத்த மத மக்களும், நாட்டின் தென் பகுதியை நோக்கி தப்பி சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனது கிராமத்தில் உள்ள மக்களை ரோஹிஞ்சா தீவிரவாதிகள் வாளால் தாக்கியதை தான் பார்த்ததாகவும், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடியதாகவும் ஒரு பெண், பிபிசி பர்மிய சேவையிடம் கூறியுள்ளார்.

கவலை தெரிவிக்கும் உலக நாடுகள்

ரோஹிஞ்சா முஸ்லிம்களின் நிலை குறித்து பல முஸ்லிம் நாடுகளும் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

“மியான்மரில் ஏற்பட்டுள்ள அனைத்து விதமான வன்முறையும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அங்குள்ள மக்களுக்குக் குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கான மனிதாபிமான உதவிகள், அபிவிருத்தி உதவிகளை வழங்க வேண்டும்” என இந்தோனேசியா வெளியுறத்துறை அமைச்சர் ரெட்னோ மார்சுடி கூறியுள்ளார்.

மேலும், மியான்மரின் நடைமுறை தலைவரான ஆங் சான் சூச்சியையும், ரெட்னோ மார்சுடி கடந்த திங்களன்று சந்தித்து பேசினார்.

மியான்மர் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடக்கும் பல நாடுகளில், இந்தோனேசியாவும் ஒன்று. பாகிஸ்தானும், மலேசியாவும் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளன.

மியான்மருடனான வர்த்தகத்தை மாலத்தீவு நிறுத்தி வைத்துள்ளது.

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான ராணுவத்தின் பிரசாரத்திற்கு கண்டனம் தெரிவிக்குமாறு சூச்சிக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், பலம் மிக்க ராணுவம் மற்றும் ரோஹிஞ்சா மக்களுடனான விரோதப் போக்கை கொண்டுள்ள பர்மா மக்களையும் சூச்சி எதிர்கொள்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஓர் அதிகாரப்பூர்வ பயணமாக செவ்வாயன்று மியான்மர் வந்துள்ளார்.

கடந்த மாதம், மியான்மருடனான பொருளாதார மற்றும் ராணுவ உறவுகள் அதிகரிக்க மோதி அரசு விரும்பியது. மேலும், இந்தியாவில் வாழும் ரோஹிஞ்சா மக்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.

தங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாட்டினை கண்டுபிடிப்பது, ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.

ஏனெனில், ரோஹிஞ்சாக்களை தனது குடிமக்களாக மியான்மர் கருதுவதில்லை. அத்துடன் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்துள்ள வங்கதேசமும் அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. -BBC_Tamil