பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க சீனா திட்டம்

China-ban-petrolcarsபெய்ஜிங், உலகின் மிகப்பெரும் ஆட்டோமொபல் சந்தையாக விளங்கும் சீனா, தனது நாட்டில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. மின்னணு கார்களை ஊக்குவிக்கவும் காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியாகவும் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆட்டோ மொபைல் தொடர்பான  கூட்டத்தில் கலந்து கொண்ட சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை துணை மந்திரி ஜின் கவுபின், கூறுகையில் இந்த தகவலை தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பெட்ரோல் டீசல் கார்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜின் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதை அமல்படுத்துவதற்கு எவ்வளவு காலம் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

பிரான்சு மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் டீசல், பெட்ரோல் கார்கள் உற்பத்திக்கு தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளதை பின்பற்றி சீனாவின் இந்த அறிவிப்பானது வெளிவந்துள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் புதிய கார்கள் விற்பனைக்கு சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-dailythanthi.com