டாக்கா, மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களா, வங்காளதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த இன மக்களுக்கு அங்குள்ள அரசு குடியுரிமை வழங்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் மீது மியான்மர் அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்களிடையே ‘அரகன் ரோஹிங்யா சால்வேன் ஆர்மி’ (அர்சா) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் குழு உருவானது.
இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவினர், கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி அந்த நாட்டின் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பெரும் சண்டை மூண்டது. இந்த சண்டையின் காரணமாக அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர்.
ராணுவமும், ராக்கின் மாகாணத்தில் வசிக்கிற புத்த மத மக்களும் தங்களுக்கு எதிராக மிகக்கடுமையான தாக்குதலை நடத்தி வருவதாகவும், தங்களது கிராமங்களை எரித்து வருவதாகவும் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அங்கு நிலவும் வன்முறை காரணமாக ரோகிங்கியா முஸ்லீம்கள் அண்டை நாடான வங்காளதேசத்திற்கு ஆபத்தான முறையில் தஞ்சம் அடைகின்றனர். இதனால், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியா முஸ்லீம்கள் அகதிகளாக வங்காளதேசத்திற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக மியான்மர், கொடுமைகளை அரங்கேற்றுவதாக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார். புத்தமதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியான்மர் நாடு, அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வங்காளதேசத்திற்கு அகதிகளாக வந்துள்ளவர்கள், மீண்டும் மியான்மர் திரும்புவதற்கான உரிய நடவடிக்கையை அந்த நாடு எடுக்க வேண்டும் என்றும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
மேலும், அண்டை நாடுகளுடன் நாங்கள்(வங்காளதேசம்) நட்புறவையே விரும்புகிறோம். ஆனால், எந்த வகையான அநீதியையும் நாங்கள் சகித்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ மாட்டோம். இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் வரை நாங்கள் தொடர்ந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம். வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வங்காளதேசம் உரிய உதவிகளை செய்யும்” என்றார். ரோகிங்கியா முஸ்லீம்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம் சென்று பார்வையிட்ட பிறகு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
-dailythanthi.com
ROGINGYO
Rogingyo முஸ்லிம்கள் மியன்மார் நாட்டின் பூர்வீகக் குடியினர் அல்லர் ! பதினைந்தாம் நூற்றாண்டுமுதல் மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு வங்காளத்திலிருந்து (இன்றைய பங்களாதேஷ்) மியன்மாருக்கு இடம் பெயர்ந்தவர்கள். பெரும்பான்மையினர், சிறுபான்மையினரை அடக்கியாள முற்படுவதை என்னவென்று சொல்வது ? நம்நாட்டில் நடவாத ஒன்றா ? இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் “ஓராங் ஆசிலிகளே” ! ஆனால் இங்கு நடப்பதென்ன ? சொல்லித்தெரிய வேண்டியதில்லை ! உலகெங்கிலும் இதே நிலைதான் ! அகம்பாவம் கொண்டு அடுத்தவரைத் துன்புறுத்துகிறான். அன்புவழிச் செல்ல மறுக்கிறான் ! அனுதினமும் தன்னலங்கருதிக் கடவுளை வணங்குகிறான். பிறர்நலம்பேண மறக்கிறான் ! உலகம் உள்ளளவும் இது தொடர்கதைதான் போலும்…!!!