ரோஹிஞ்சா பிரச்சனையை கையாண்டது தொடர்பாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி மீது எழுந்துள்ள விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், அடுத்த வாரத்தில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ரகைன் மாகாணத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசத்திற்கு தப்பி சென்றுள்ளனர்.
இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவிக்காத காரணத்தால் ஆங் சான் சூச்சி மீது மேற்குலகில் உள்ள அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அப்பாவி குடிமக்கள் குறிவைக்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மியான்மர் ராணுவம், தாங்கள் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம்?
ஆங் சான் சூச்சி சார்பாக மியான்மர் அரசு பேச்சாளரான ஜாவ் டே கூறுகையில், ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் மியான்மர் அரசு தலைவர் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவித்தார்.
மற்றொரு மியான்மர் அரசு பேச்சாளரான ஆங் சின், ராய்ட்டர்ஸ் செய்தி முகாமையிடம் பேசுகையில், பல முக்கிய பிரச்சனைகளை ஆங் சான் சூச்சி சமாளிக்க வேண்டியிருப்பதால் ஒருவேளை ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்லாமல் இருக்கலாம் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஆங் சான் சூச்சி விமர்சனங்களை சந்திக்கவோ, பிரச்சனைகளை சமாளிக்கவோ எப்போதும் அஞ்சியதில்லை” என்று தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரை நியூ யார்க்கில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி பங்கேற்பதாக இருந்தார்.
‘மியான்மரில் நடப்பது இன அழிப்புக்கான எடுத்துக்காட்டு’
முன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, “இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது” என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் தெரிவித்திருந்தார்.
ரகைன் மாகாணத்தில் “மோசமான ராணுவ நடவடிக்கையை” முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார். -BBC_Tamil
“ஒரு நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பவர்கள், சவால்விடுபவர்கள் தீவிரவாதிகளே” என்பதில்
ஐ.நா. பொதுசபைக்கு இருவேறு கருத்து இருப்பின்
ஐ.நா.கூட்டத்தில் ஆங் சான் சூச்சி பங்கேற்பதும்-பங்கேற்க்காமல் இருப்பதும் ஒன்றுதான்.
நாட்டின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கும் மியான்மார் அரசாங்கத்தை ஆதரிக்காத நாடுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே அர்த்தமாகிறது.