ரோஹிஞ்சா பிரச்சனை: ‘பேரழிவு நிலையில் மியான்மரில் மனிதாபிமானம்’ – ஐ.நா. பொது செயலாளர்

rohingya3மனிதாபிமான ரீதியாக மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லீம்கள் பேரழிவு நிலையில் உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரோஹிஞ்சா கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

அப்பாவி குடிமக்கள் குறிவைக்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மியான்மர் ராணுவம், தாங்கள் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மியான்மரில் நடைபெற்று வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர உடனடி அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

பெளத்த மதம் பெரும்பான்மையாக உள்ள ரகைன் மாகாணத்தில் வாழ்ந்து வரும் ரோஹிஞ்சா இனமக்கள் (பெரும்பாலும் முஸ்லீம்கள்) நீண்ட காலமாக நாட்டில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஐ.நா. கூட்டத்தில் ஆங் சான் சூச்சி பங்கேற்கவில்லை

இதனிடையே, ரோஹிஞ்சா பிரச்சனையை கையாண்டது தொடர்பாக மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி மீது எழுந்துள்ள விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், அடுத்த வாரத்தில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை குறித்து கருத்து தெரிவிக்காத காரணத்தால் ஆங் சான் சூச்சி மீது மேற்குலகில் உள்ள அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரை நியூ யார்க்கில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி பங்கேற்பதாக இருந்தார்.

மியான்மர் ரோஹிஞ்சாக்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குமாறு சர்வதேச சமூகத்தை ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

”மியான்மரில் மனிதாபிமான நிலை பேரழிவு நிலையில் உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரோஹிஞ்சா பிரச்சனையை இன அழிப்பு என்று வகைப்படுத்த முடியுமா என்று கேட்டதற்கு பதிலளித்த அன்டோனியோ கட்டெரஸ், ‘மூன்றில் ஒரு பங்கு ரோஹிஞ்சாக்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை விட வேறு வார்த்தைகளால் இதனை விவரிக்க முடியுமா? என்று வினவினார்.

‘மியான்மரில் நடப்பது இன அழிப்புக்கான எடுத்துக்காட்டு’

முன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, “இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது” என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் தெரிவித்திருந்தார்.

ரகைன் மாகாணத்தில் “மோசமான ராணுவ நடவடிக்கையை” முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார். -BBC_Tamil