தென்கிழக்கு வங்கதேசத்தில் இருப்பதைப் போன்ற பெரிய அகதி நெருக்கடிச் சூழ்நிலையை சமாளிப்பதில் ஆரம்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவது இயற்கைதான்.
ஆனால் இரண்டரை வாரங்கள் முடிந்த நிலையில், உதவி நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த முறையில் தொடங்கியிருக்க வேண்டும்.
பெரும்பாலான ரோஹிஞ்சா அகதிகள் வந்து சேர்ந்த வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில், அப்படிப்பட்ட எவ்வித உதவி நடவடிக்கைகளையும் காணமுடியவில்லை.
உணவு, கூடாரங்கள் ஏற்றிய விமானங்கள் அங்கே ஏதும் இறங்குவதாகத் தெரியவில்லை. கூடாரங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளை சாலைகளில் பார்க்க முடியவில்லை.
மிக அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், எவ்வித மனிதாபிமான உதவி நிறுவனங்களும் தங்கள் தொடர்பில் இல்லை என ரோஹிஞ்சா மக்கள் கூறுகின்றனர்.
எல்லை கடந்து வரும்போது தங்களது பெயர், கிராமம் ஆகியவை தந்ததோடு சரி என்றும் அதன் பிறகு எந்த உதவியும் வரவில்லை என்று ரோஹிஞ்சா அகதிகள் கூறுகின்றனர்.
பழைய பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மோசமான கூடாரங்கள் எல்லாம் அகதி மக்கள் தாங்களே செலவு செய்து அமைத்துக்கொண்டவை.
சாலையோரங்களில் புதிதாக வெட்டப்பட்ட மூங்கில் குச்சிகளையும், பிளாஸ்டிக் ஷீட்டுகளையும் விற்கும் கடைகள் முளைத்துள்ளன.
கையில் பணம் இல்லையென்றால் எதுவும் கிடைக்காது.
பருவமழைக்கு மத்தியிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் திறந்தவெளி பகுதியில் தங்கியுள்ளனர்.
நல்ல உள்ளம் கொண்ட உள்ளூர் வங்கதேச மக்கள் லாரிகளில் வந்து, உணவு உடை உள்ளிட்ட நிவாரண பொருட்களை கூட்டமாகக் காத்திருக்கும் ரோஹிஞ்சா மக்களை நோக்கி வீசுகின்றனர். ஆனாலும், அங்கு உணவுப்பற்றாகுறை நிடிக்கிறது.
உணவைப் பெற சிறுவர்களும் வயதானவர்களும் கூட்டத்தில் மிதிபடும் சூழல் நிலவுகிறது.
அம்மக்களுக்கு எந்த உதவியுமே கிடக்கவில்லை என சொல்லமுடியாது. அனைத்து முக்கிய மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களும் அங்கு உள்ளன.
நிறைய மக்களுக்கு அவர்களுக்குத் தேவையானது கிடைக்கவில்லை; நிவாரண நடவடிக்கைகளை முறைப்படி ஒருங்கிணைத்தால் நிலைமை மேம்படும் என்று அதிகாரபூர்வமாகப் பேசும்போது அந்த நிறுவனங்கள் நாசூக்காகக் கூறுகின்றன.
ஊடகத்துக்காக இல்லாமல் அதிகாரபூர்வமற்ற முறையில் பேசும்போது அவர்கள் சொல்கிற கதைகள் வேறுவிதமானவை. போதிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும், தங்கள் செயல்பாடுகளுக்கு வங்கதேச அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளாலும் தாங்கள் உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையம் தற்போது வங்கதேசத்தில் எப்படி நடத்தப்படுகிறது என்பதே இதற்கு மிகவும் தெளிவான உதாரணம்.
ஒரு பழைய உத்தரவின்படி, குட்டுபலோங் மற்றும் நயாபாரா என்ற இரண்டு அகதிகள் முகாம்களில் செல்பட மட்டுமே ஐ.நா அகதிகள் ஆணையத்துக்கு அனுமதி உள்ளது.
இந்த இரண்டு அகதி முகாம்களும் பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் உள்ளன. முந்தைய நிகழ்வுகளில் மியான்மரில் இருந்து வெளியேறிய 20,000 முதல் 30,000 ரோஹிஞ்சா அகதிகள் அகதிகள் இங்கு இருந்தனர்.
ஆகஸ்ட் 25க்குப் பிறகு கூட்டம் கூட்டமாக ரோஹிஞ்சா மக்கள் மியான்மரை விட்டு வெளியேறினர். இதனால், இரண்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 70,000த்தை தொட்டது என ஐ.நா கூறுகிறது.
அடைக்கலம் தேடி வங்கதேசம் வந்த மீதமுள்ள 4 லட்சம் அகதிகளும், புதிதாக வங்கதேசம் வரும் அகதிகளும் முகாம்களுக்கு வெளிப்புறங்களிலும், சாலையோரங்களிலும் தங்கியுள்ளனர். வந்ததேச அரசின் விதிகளால், ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையம் அம்மக்களுக்கு உதவிகளை வழங்க முடியவில்லை. இது அசாதாரண சூழ்நிலை.
அகதிகளுக்குத் தேவையான உடைகள், தார்ப்பாய்கள், பாய்கள் ஆகியவற்றை இரண்டு பெரிய சரக்கு விமாங்களில் அனுப்புவதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையம் கூறுகிறது.
இவை 25,000 அகதிகளுக்கான உடனடித் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானது. அடுத்தடுத்து ஏற்பாடு செய்யப்படும் உதவிப் பொருள் விமானங்களால் 1.2 லட்சம் பேருக்குத் தேவையானவற்றை கொண்டுவர முடியும். ஆனால், தேவைப்படும் மக்களுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்கும் அதிகாரம் ஐ.நா ஆணையத்திற்கு இல்லை.
ஐ.நாவின் அகதிகள் ஆணையம் போன்ற அமைப்புகள் பணியாற்றுவதை வங்கதேச அரசு ஏன் தடுக்கிறது? அந்த நாடு இருதலைக் கொள்ளி நிலையில் உள்ளது.
1971-ல் வங்கதேசம் தனிநாடாக உருவாகக் காரணமான உள்நாட்டுப் போரில் 10 மில்லியனுக்கு அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். நாட்டை விட்டு வெளியேறுவது எவ்வளவு கொடுமையானது என்பது வங்கதேச மக்களுக்குத் தெரியும்.
அதுபோன்ற வேதனையைச் சந்தித்துவரும் சக முஸ்லிம் மக்களுக்கு உதவ வேண்டும் எனவே வங்கதேசம் விரும்புகிறது.
அதேநேரம், ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட ஏழ்மையான தங்கள் நாட்டிற்கு, இந்த ரோஹிஞ்சா அகதிகள் பெரும் சுமையாக இருப்பார்கள் என்பதையும் வங்கதேசம் அறிந்திருக்கிறது.
ரோஹிஞ்சா அகதிகள் வங்கதேசத்திற்கு வருவது இது முதல் முறையல்ல. அரசு கணக்குப்படி ஏற்கனவே 4 லட்சம் ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்தில் உள்ளனர்.
வங்கதேசப் பிரதமர் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டபடி அகதிகளுக்கு உதவ அந்நாடு விரும்புகிறது. அதே நேரம், அகதிகளின் வாழ்க்கையை வசதியாக ஆக்குவதன் மூலம் அகதியாக எல்லை தாண்டி வர விரும்புகிறவர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் அது விரும்பவில்லை. வங்கதேசத்தின் இந்த அணுகுமுறை வேதனை அனுபவிக்கும் அகதிகளுக்கு மட்டுமே இடர்ப்பாடு இல்லை.
இதுவரை உலகின் விமர்சனம் மியான்மர் மீது மட்டுமே குவிந்துள்ளது. தற்போது வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் சந்தித்துவரும் துயரமும் வேதனையும் தொடர்ந்தால், உலகின் விமர்சனக் கூர்முனை வங்கதேசத்தை நோக்கத் திரும்பும். -BBC_Tamil