“கௌரவக் கொலை” காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படும், பாகிஸ்தானின் பதின்ம வயது ஜோடியின் உடல்களில் உள்ள காயங்கள், அவர்கள் அதிக மின்சார பாய்ச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.
மரணமடைந்து ஒரு மாதம் ஆன நிலையில், 15 வயதுடைய பக்த் ஜன் மற்றும் அவரது 17 வயது காதலர் ரஹ்மானின் உடலை, கராச்சியில் மருத்துவர்கள் மற்றும் நீதிபதியின் முன்பு, போலிசார் தோண்டி எடுத்துள்ளனர். உடல்களின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த ஜோடி, வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும். இதையடுத்து குடும்பத்தினரும், ஜியர்கா என அழைக்கப்படும், அவர்களின் பழங்குடியின முதியவர்களும் அவர்களை கொல்ல உத்தரவிட்டதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.
கௌரவ கொலை செய்யும் போது, காதலர்களை அதிக மின்சாரத்தை செலுத்திக் கொல்வது என்பது பாகிஸ்தானில் இதுவரை கேள்விப்படாத ஒன்று என பிபிசி இஸ்லாமாபாத் செய்தியாளர் இல்யாஸ் கான் தெரிவிக்கிறார்.
கடந்த 2010 ஆம் அண்டு, இந்திய தலைநகர் டெல்லியில் இதுபோன்ற ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பான செய்தியை பிபிசி அப்போது வெளியிட்டிருந்தது.
இறந்த கராச்சி ஜோடிகளின் தந்தையர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பழங்குடியின சபையின் தலைவர் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
ஒரு நபர் அளித்த தகவல் மூலமாக, இந்த கொலை நடந்து உடல்கள் புதைக்கப்பட்டதை அறிந்ததாக, ஊடகங்களிடம், மாவட்ட தலைமை காவலர் ராவ் அன்வர் கூறியுள்ளார்.
கைகள், மார்பு மற்றும் கால்களில் அதிக மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் அடையாளங்கள் உள்ளதாக கூறினார்.
“இரு உடல்களிலுமே சித்திரவதை மற்றும் அதிக மின்சார பாய்ச்சலுக்கான அறிகுறிகள் உள்ளன” என்று கராச்சி சிவில் மருத்துவமனையின் காவல்துறை மருத்துவர் கரார் அகமது அப்பாஸி , டான் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
கௌரவ கொலைகள் என அழைக்கப்படும் கொலைகள், பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகவும், குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல், ஆணை மணந்துகொள்ள முயலும் பெண்களே இதில் பெரும்பாலும் பாதிப்பிற்கு உள்ளாவதாக மனித உரிமை குழுவினர் கூறுகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள், மொஹ்மாண்ட் பகுதியின் வடமேற்கு பகுதியை சேர்ந்த பஷ்தூன் சுஃபி பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்
இந்த கொலை குறித்த செய்தியை முதன்முதலில் வெளிகொண்டுவந்த `தி நியூஸ் நியூஸ்பேப்பர்` பத்திரிக்கையின் செய்தியாளர் சியா உர் ரெஹ்மான், இந்த இரு குடும்பத்தினருமே, அவர்களின் பழங்குடியின மரபின்படி ஒரு தீர்வை எட்டி இருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.
“இந்த தீர்வின் கீழ், இந்த தம்பதியினர் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும், மேலும், குடும்ப மரியாதையாக, இறந்த ஆணின் குடும்பத்தில் உள்ள இரு பெண்களை, இறந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள இரு ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது”.
“ஆனால், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இது குறித்து ஆதரவளிக்க ஆழைக்கப்பட்ட ஜியரா, இதை ஆதரிக்க மறுத்து, பிறருக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அந்த தம்பதியை கொல்ல உத்தரவிட்டார்” என கூறினார்.
பிபிசியிடம் பேசிய காவல்துறை அதிகாரி அமன் மர்வத், கைதான உறவினர்கள் “இறந்த இருவருக்கும் போதை மருந்து அளிக்கப்பட்டு, ஒரு மெத்தையில் கட்டிவைக்கப்பட்டு, அதிக மின்சாரம் பாய்ச்சப்பட்டது” என கூறியுள்ளனர் என்றார்.
கடந்த ஆகஸ்டு 14ஆம் தேதி, பக்த் ஜான் அவரின் வீட்டைவிட்டு ரகசியமாக வெளியேறியதாகவும், ரஹ்மானின் வருகைக்காக காத்திருந்த அவரை, குடும்பத்தினர் சில மணி நேரத்திற்கு பின்பு அருகாமை வீட்டில் கண்டுபிடித்ததாகவும் கூறினார்.
“அந்த பெண் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொல்லப்பட்டுள்ளார், ஆண் அடுத்த நாள் கொல்லப்பட்டுள்ளார்” என காவல்துறை அதிகாரி மர்வத் கூறினார்.
பழங்குடியின சபை உறுப்பினர்களை தொடர்புகொள்ள இயலவில்லை. பெரும்பான்மையானோர் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்க இரு குடும்பத்தை சேர்ந்த யாரும் இல்லை.
2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015 ஆம் ஆண்டில், குடும்ப கௌரவத்தை கொச்சைப்படுத்தியதாக கருதி, உறவினர்கள் மூலமாக, கிட்டத்தட்ட 1,100 பெண்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. -BBC_Tamil