போர்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தினரைப் பாதுகாப்போம் – திலக் மாரப்பன உறுதி

tilak-marapanaஜெனரல் ஜெகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று அண்மையில் பிரேசிலில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இல்லை என்று சிறிலங்காவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.

“ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நல்ல நோக்கத்துடன் சுமத்தப்படவில்லை.

அவருக்கு எதிராக பிரேசிலில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக உறுதியான- நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை.

சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல.

2011ஆம் ஆண்டில், அமெரிக்காவிலும், சுவிட்சர்லாந்திலும், ஏற்கனவே இதுபோன்ற இரண்டு குற்றச்சாட்டுகள் இராணுவ அதிகாரிகள் மீது அரசசார்பற்ற நிறுவனங்களால் சுமத்தப்பட்டன. ஆனால் அந்த நாட்டு அரசாங்கங்கள் இரண்டு வழக்குகளையும் விலக்கிக் கொண்டன.

ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அவரது பதவிக்காலம் முடிந்து, அங்கிருந்து வெளியேறிய பின்னரே முன்வைக்கப்பட்டுள்ளன.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்காது.

ஜெனரல் ஜயசூரிய தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல.

நான் இங்கு கூறுவது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தின் ஒன்றுபட்ட தீர்மானத்தையே ஆகும்.

போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவ அதிகாரிகளை அரசாங்கம் பாதுகாக்கும்” என்றும் அவர் உறுதியளித்தார்.

-puthinappalakai.net

TAGS: