மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள ஹர் அடார் என்னும் யூதக் குடியிருப்பின் நுழைவாயிலில், இன்று செவ்வாய்க்கிழமை, ஒரு பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய அந்த நபர் அருகாமையில் உள்ள கிராமத்தில் இருந்து வந்தவர். 37 வயதான அவரும் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்.
இத் தாக்குதல் பாலஸ்தீனின் தூண்டுதலால் நடந்துள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் முயற்சியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின், மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரதிநிதி ஜேசன் கிரீன்பிளேட் ஜெருசலேம் நகருக்கு வருகை புரிந்துள்ள இச்சமயம் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்ற பின்னர், மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வெள்ளை மாளிகை முயற்சி செய்து வருகிறது. ஆனால், அம்முயற்சிகளால் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
இஸ்ரேலிய ஊடகங்களால் நிமர் ஜமால் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்தத் துப்பாக்கிதாரி ஹர் அடார் குடியிருப்புப் பகுதியின் பின்புற நுழைவாயிலில் இருந்த காவல் படையினரின் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திருந்த பின்னர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் இரண்டு காவல் படையினர் மற்றும் காவல் துறையின் ஒரு எல்லையோரக் காவல் பிரிவைச் சேர்ந்த ஒரு காவலர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மிகவும் நெருங்கிய தொலைவில் இருந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இன்னொரு நபரும் காயமடைந்துள்ளார்.
நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான நிமர் ஜமால் மேற்குக் கரையின் எல்லையோரம் அமைந்துள்ள யூதக் குடியிருப்புகளில் பணியாற்ற இஸ்ரேல் அரசின் அனுமதியைப் பெற்றிருந்தார் என்று இஸ்ரேல் உள்நாட்டு காவல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர் ஹர் அடாரின் கிழக்கே ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ள பெய்ட் சூரிக் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.
காசாவில் இருந்து செயல்படும் பாலஸ்தீன தீவிரவாத இயக்கங்களான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய அமைப்புகள் இந்தத் தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்திருந்தாலும், இதுவரை இதற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தொடரும் தாக்குதல்கள்
கடுமையான பாதுகாப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகளில் பணியாற்ற சுமார் 36,000 பாஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.
1967ல் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின்னர் நிறுவப்பட்ட சுமார் 140 யூதக் குடியிருப்புகளில் 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் வசிக்கின்றனர்.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இந்தக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவையாகக் கருதப்பட்டாலும், இஸ்ரேல் அதை மறுத்து வருகிறது. இரு நாட்டுப் பேச்சுவார்தைகளின்போதும் பெரிதும் விவாதிக்கப்படும் இந்தக் குடியிருப்புகள் பற்றிய விவகாரம், அந்நாடுகளுக்கு இடையேயான அமைதிக்கும் பெரும் தடையாக உள்ளதாக பாலஸ்தீன் கருதுகிறது.
கடந்த 2015 முதல் பாலஸ்தீனியர்கள் அல்லது இஸ்ரேலிய அரேபியர்கள் இஸ்ரேலியர்கள் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். 2015 முதல் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல்களில் சுமார் 50 இஸ்ரேலியர்கள் மற்றும் 5 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலாளிகள் என்று இஸ்ரேல் அரசால் கூறப்படும் சுமார் 300 பாலஸ்தீனியர்களும் இந்தக் காலகட்டத்தில் கொல்லப்பட்டுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது. -BBC_Tamil