தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட்டுக்கு கிராமப்புற விவசாயிகளுக்கு அரசி கொள்முதல் விலையில் மானியம் அளித்தது தொடர்பான வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தண்டனை அளிப்பதற்கு முன்னதாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
அந்நாட்டு அரசுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இழப்பு ஏற்படுத்திய அரிசி மானியத் திட்டத்தைத் தவறாக கையாண்டதற்காக, அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தாய்லாந்து உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி நடப்பதற்கு சில வாரங்கள் முன்பு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். பிறகு அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் முறையாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டு, அரசியலில் ஈடுபட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
ஆனால், தம்மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கிறார். அந்த ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் முன்பே துபாய் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் தாய்லாந்து மக்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவர் இன்னும், கிராமப்பகுதிகளும், ஏழை மக்கள் மத்தியிலும் பிரபலமானவராகவே இருக்கிறார்.
அந்த வழக்கின் விசாரணையின்போது, அரிசி மானியத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது தெரிந்தும் அவர் அதைத் தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
“அவரின் செயல்பாடுகள் சட்டவிரோதமான பலன்களை அடையும் வகையில் இருந்தன. எனவே, குற்றம்சாட்டப்பட்டுள்ளவர், கடமை தவறியுள்ளதாகவே கருதப்படுகிறது,” என்று நீதி மன்றம் கூறியிருந்தது.
விசாரணையின் போது, அந்த திட்டத்தின் அன்றாட செயல்பாடுகளுக்கு தான் பொறுப்பல்ல என கூறிய அவர், அரசியல் ரீதியான தொந்தரவுக்கு தாம் ஆளாகியுள்ளதாகக் கூறினார்.
“தனது தேர்தல் அறிக்கையில் மையமாக இருந்த ஒரு திட்டத்திற்காக ஒரு பிரதமர் மீதான குற்றம் நிரூபிக்கப்படுவது ஒரு சங்கடமான முன்னுதாரணத்தை உருவாகியுள்ளது,” என்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜொனாதன் ஹெட் கூறுகிறார்.
“அவர் நேரடியாக அந்த ஊழல் ஈடுபட்டதற்காக ஆதாரங்கள் எதுவும் இல்லை,” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
அரிசி மானியத் திட்டம் – என்ன அது?
•இங்லக்கின் தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டம் ஒரு அங்கமாக இருந்தது. அவர் 2011-ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு இது தொடங்கப்பட்டது.
•கிராமபுற வறுமையைப் போக்க, அரிசிக்கான சந்தைவிலையைவிட இரண்டு மடங்கு விலையை இத்திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு அரசு வழங்கியது.
•இந்த திட்டம், தாய்லாந்தின் அரிசி ஏற்றுமதியை பாதித்தது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்.
இந்தத் திட்டம் கிராமப்புற வாக்காளர்களிடையே பிரபலமாக இருந்தாலும், இது மிகவும் செலவு அதிகமாகவும், ஊழலுக்கு ஏதுவானதுமாக இருந்தது என்று இங்லக்கின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். -BBC_Tamil

























