ஒரு புதிய ஆய்வின் படி, ஐரோப்பாவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் எச்.ஐ.வி. நோய்த்தொற்று அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2004-2015க்கு இடையிலான காலத்தில் 31 நாடுகளில் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் விகிதங்களை ஆய்வு செய்தனர்.
2015 ஆம் ஆண்டில், எச்.ஐ. வி நோயுடன் கண்டறியப்பட்ட ஆறு பேரில் ஒருவர் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன்பு இது பத்தில் ஒன்றாக இருந்தது.
இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 16 நாடுகளில் , 50-வயதுக்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ. வி நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக என்று ஆய்வு கூறுகிறது.
‘தி லான்செட் எச்.ஐ.வி.’ என்ற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆராய்ச்சி முடிவு கட்டுரையாக வெளியாகியுள்ளது. எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படும் வயதானவர்கள் நோய் முற்றியநிலையில் கண்டறியப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், இந்நிலையில் இதற்கு சிகிச்சை அளிப்பது கடினமாக இருப்பதாகவும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எச்.ஐ.வி. பாலியல் செயல்பாடு அதிகமுள்ள இளம் வயதினருக்கு உரியதென நாம் எப்போதும் நினைக்கிறோம்.
பாலியல் செயல்பாடு மிக்கவர்கள் என்பதை இளைஞர்களைக் குறிப்பதென நாம் முடிவு செய்துகொள்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகள் எச்.ஐ.வி. அபாயம் புதிய கோணத்தில் பெருகிவருவதைக் காட்டுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் வயதானவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. பாதிப்பின் விகிதம் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் இவ்விகிதம் அப்படியே உள்ளது,” என்கிறார் இந்தக் கட்டுரையை எழுதிய டாக்டர் அனஸ்தாசியா ஃபாரிஸ்
பாதுகாப்பற்ற உடலுறவு
அதிக அளவிலான வயோதிகர்கள் ஏன் தொற்றுநோய்க்கு ஆளாகியுள்ளார்கள் என்று இந்த ஆய்வு நோக்கவில்லை. ஆனால் எதிர்ப்பாலினப் பாலுறவின் மூலம் பரவுதலே அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வயதான காலத்தில் பெண்களைவிட ஆண்களே அதிகம் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இது ஆய்வானது குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டோரைக் குறிவைத்து, அவர்களுக்கான விழிப்புணர்வு, பிரசாரம், பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறது.
“எமது கண்டுபிடிப்புகள் விரிவான எச்.ஐ.வி தடுப்புத் திட்டங்களை வழங்குவதோடு, கல்வி, ஆணுறைகளுக்கான முக்கியத்துவம், சிறந்த பரிசோதனை வாய்ப்புகள் மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றுக்கான தேவையை தெளிவாக விளக்குகின்றன” என்று கூறுகிறார் இக் கட்டுரையின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் லாரா டாவோசி.
“நாம் சுகாதார ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், இது நோய் தொடர்பான முகச்சுளிப்பை குறைக்கும்.
மேலும் எச்.ஐ.வி அபாயங்கள் மற்றும் தடுப்பு முறைகளைப் பற்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், புதிதாக எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கையில் இன்னும் இளைஞர்களே அதிகம் உள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட
12 ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் எச்.ஐ.வி. நோய் கண்டறியப்பட்டவர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் 15 இலிருந்து 49 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். இதனோடு ஒப்பிடும் போது 54,000 பேர் மட்டுமே முதியவர்கள்.
உலக மக்களில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பல வகையான சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த பட்டியலில் எச்.ஐ.வி-யும் இடம்பெற்றிருப்பது கவலைக்குரியது.
“50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பலர் தாங்கள் எச்.ஐ.வி அபாயத்தில் இருப்பதை உணராமல் இருக்கிறார்கள்.
அதனால்தான் அவர்களில் எச்.ஐ.வி நோய் பாதிப்புக்கு உள்ளாவோர் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்படும் வாய்ப்பு அதிகம் என்று இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என பிரிட்டிஷ் எய்ட்ஸ் தொண்டு நிறுவனமான டெர்ரென்ஸ் ஹிக்கின்ஸ் அறக்கட்டளையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் மைக்கேல் பிராடி கூறினார்.
எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகிற இளைஞர்களில் 50 சதவீதம் பேர் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்படுகின்றனர்.
ஆனால், 50க்கு மேற்பட்ட வயதுள்ளோரில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் மூன்றில் இரண்டு பங்கினர் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றனர்.
இது சிகிச்சையை மிகவும் கடினமாக்குவதோடு, நீண்டகாலம் உயிர்வாழும் வாய்ப்யையும் குறைக்கிறது.
“ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும், எச்.ஐ.வி நோய் பாதித்த முதியவர்கள் இதய நோய் , சிறுநீரக நோய்கள் கல்லீரல் செயலிழப்பு போன்றவற்றால் அதிகமாக உயிரிழப்பதாக்க கூறப்படுகிறது.
இந்நோய்கள் எச்.ஐ.வி. நோய்த்தொற்றை மோசமடையச் செய்யும் என்கிறார் லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளியின், பேராசிரியர் ஜேனட் சீலி
இந்தக் கொள்ளை நோயைத் தடுக்கவேண்டுமெனில் எல்லா வயதுடையவர்களிடமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். வயதானவர்கள் இதில் விதிவிலக்கல்ல. -BBC_Tamil