தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதில் சீனா அக்கறை கொண்டுள்ளதாக, சமகால உலக ஆய்வு நிலையம் மற்றும் சீன பட்டுப்பாதை சிந்தனை குழாமின் பணிப்பாளர் நாயகம் ஜின் ஷின் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“உள்நாட்டுப் போரின் போது சிறிலங்கா அரசாங்கத்திற்கு இராணுவ ரீதியில் சீனா உதவியமை, போருக்குப் பின்னரான காலப்பகுதியில் நல்லிணக்க செயற்பாடுகளில் இருந்து நழுவிய சிறிலங்கா அரசாங்கம், அனைத்துலக மட்டத்தில் நெருக்கடிகளை எதிர்கொண்ட போது, அதற்கு ஆதரவாக செயற்பட்டமை போன்றன தமிழர்கள் மத்தியில் சீனா தொடர்பில் எதிர்மறையான நிலைப்பாடு ஏற்படுவதற்கு காரணமாகியது.
எனினும் தற்போது சிறிலங்காவில் தமிழ் அரசியல் தரப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் சீனா ஆர்வமாக உள்ளது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்டுத்தி கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது சிறிலங்காவில் சாதகமான செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்படுகின்றன.
அதேபோன்று அங்கு முன்னெடுக்கப்படுகின்ற தமிழர் சார்ந்த விடயங்கள் குறித்து உன்னிப்பாக சீனா அவதானித்து வருகின்றது.
போரில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மக்கள் பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் சீனா கருத்தில் கொண்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகாரப் பிரிவின் தலைவராகவும் உள்ள ஜின் ஷின், சீனா சென்றிருந்த தமிழ் ஊடகவியலாளர்களுடன், சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடியிருந்தார்.
தமிழர்கள் மத்தியில் காணப்படும் சீனா தொடர்பான எதிர்மறையான நிலைப்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் அவரது சந்திப்பு அமைந்திருந்தது.
-puthinappalakai.net