புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி தன்மையை எந்த வழியிலும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்திருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுர மாவட்டத்தில் உள்ள தலாவ, கஹட்டகஸ்திஹிலிய பகுதிகளில் நடந்த ஐதேகவின் கூட்டங்களில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
”டி.எஸ்.சேனநாயக்கவின் காலத்தில் இருந்து இந்த நாடு ஒற்றையாட்சி நிலையில் இருந்து வருகிறது.
1972ஆம் ஆண்டு ஒற்றையாட்சித்தன்மை நாடாளுமன்றத்தின் மூலம் சட்டபூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
நாட்டின் ஒற்றையாட்சித் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், அதிகாரங்களைப் பகிரும் வகையில் 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டம், கொண்டு வரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் இது செய்யப்பட்டது
முன்மொழியப்பட்டுள்ள, புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி தன்மையை எந்த வழியிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைந்திருக்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் கூடுதல் அதிகாரப்பகிர்வைத் தான் இது கோருகிறது.
புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சித் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும், நோக்கிலான எந்தவொரு பிரிவும் உள்ளடக்கப்படாது.
பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் பிற மதங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன், பிரிவினைக்கு ஒருபோதும் அனுமதிக்காத வகையில் இது அமைந்திருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-puthinappalakai.net