பர்மிய அழகு ராணி ஒருவர், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் நடக்கும் வன்முறை குறித்து தான் பதிவேற்றிய ஒரு காணொளியின் காரணமாக தனது பட்டத்தை இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஸ்வே எய்ன் ஸி என்னும் அந்த அழகி, மியான்மரில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக ரோஹிஞ்சா போராளிகளை குற்றஞ்சாட்டி ஒரு காணொளியை கடந்த வாரம் இணையத்தில் பதிவேற்றி இருந்தார்.
‘மிஸ் கிராண்ட் மியான்மர்’ என்னும் பட்டத்தை பெற்றிருந்த 19 வயதான அப்பெண்ணின் பட்டத்தை பறிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்போட்டியின் அமைப்பாளர்கள் அறிவித்தனர்.
அவர் அப்போட்டியின் விதிமுறைகளை மீறியதாகவும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க தவறியதாகவும் கூறிய அமைப்பாளர்கள், அவர் பதிவேற்றிய காணொளி பற்றி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால், செவ்வாய்க்கிழமை அன்று ஸ்வே எய்ன் ஸி தனது பட்டம் பறிக்கப்பட்டதுக்கும், தான் பதிவேற்றிய காணொளிக்கும் தொடர்பிருப்பதாக கூறியுள்ளார்.
“ஆமாம், ஸ்வே எய்ன் ஸி, ரகைன் மாகாணத்தில் ஆர்சா போராளிகளால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தின் ஆட்சி பற்றி ஒரு காணொளியை வெளியிட்டார், ஆனால் அது ஒரு அழகுப் போட்டியாளரின் கண்ணியமான பொறுப்பை நிரூபிப்பதில் தோல்வி அடைந்தது” என்று அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிடப்பட்டிருந்த அறிக்கையில் அரூக்கன் ரோஹிஞ்சா சால்வேஷன் ஆர்மி பற்றி மேற்கோள்காட்டி பதிவிடப்பட்டிருந்தது.
அவர் “தனது நாட்டிற்கான உண்மையை பேசுவதற்காக தனது புகழைப் பயன்படுத்த இந்த நாட்டிலுள்ள ஒரு குடிமகளாக கடமைப்பட்டுள்ளார்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த வாரம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு காணொளியில், அர்சாவின் “கலிபாட் ஸ்டைல் இயக்கத்தின்” தாக்குதல்கள் “அளவுக்கும் அதிகமாக உள்ளது” என்று ஸ்வே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கிலத்தில் பேசிய ஸ்வே எய்ன் ஸி, போராளிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் தாங்களாகவே ஒரு ஊடக பிரச்சாரத்தை மூலம், “பயங்கரவாத மற்றும் வன்முறை தாங்களே நடத்தி, அதில் தங்களை தாங்களே ஒடுக்கப்பட்டவர்களாக காட்டிக்கொள்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறுபான்மையினரான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது பர்மிய ராணுவம் செய்த அட்டூழியங்கள் குறித்து அவரது காணொளியில் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இன அழிப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ராணுவம், தான் போராளிகளை மட்டுமே குறிவைப்பதாக கூறுகிறது.
சமீப காலமாக நடந்து வரும் இந்த வன்முறை கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி அர்ஸா போராளிகள் அங்குள்ள காவல் சாவடிகளை தாக்கியதை அடுத்து நடந்த ராணுவத்தின் எதிர்தாக்குதலில் இருந்து ஆரம்பித்தது. 5 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிஞ்சாக்கள் தங்களது அண்டை நாடான வங்காளதேசத்திற்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
ரகைனின் கிராமங்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினரான இந்துக்கள் உட்பட பலரும் இந்த வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக எண்ணிக்கையில் புலப்பெயரும் ரோஹிஞ்சாக்கள் மற்றும் ராணுவதின் மீது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது ரோஹிஞ்சா சமுதாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதையே காட்டுவதாக பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். -BBC_Tamil