இஸ்தான்புல், துருக்கியில் கடந்த ஆண்டு முறியடிக்கப்பட்ட ராணுவ புரட்சியின் பின்னணியில், அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கி மதபோதகர் பெதுல்லா குலன் இருப்பதாக அந்த நாடு குற்றம் சாட்டியது. எனவே அவரை நாடு கடத்துமாறு அமெரிக்காவை வேண்டி வரும் துருக்கி, அவருடன் தொடர்புடைய சொந்த நாட்டு அதிகாரிகளை களையெடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதன் சமீபத்திய நடவடிக்கையாக, இஸ்தான்புல்லில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வரும் துருக்கியை சேர்ந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தங்கள் தூதரகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் கைது செய்யப்பட்ட விவகாரம் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அமெரிக்கா செல்லும் துருக்கியர்களுக்கு வழங்கப்படும் குடியேற்றம் இல்லாத விசா நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக அங்காராவில் உள்ள அமெரிக்க தூதரகம் செய்தி வெளியிட்டு உள்ளது. துருக்கி மேற்கொண்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகள் (ஊழியர் கைது), இங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் அது கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக துருக்கி செல்லும் அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் விசா நடைமுறைகள் (ஆன்லைன் விசா உள்பட) அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள அந்த நாட்டு தூதரகங்களும் அறிவித்து உள்ளன.
-dailythanthi.com