கேட்டலோனியா ஸ்பெனிலிருந்து வெளியேறி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்துவதை இடைநிறுத்தம் செய்வதாக கேட்டலோனிய அரசின் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் அந்தப் பிராந்தியத்தின் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். ஸ்பெயின் அரசுடன் நியாயமான பேச்சு வார்த்தை நடத்தும் நோக்கில், சில வாரங்களுக்கு இந்த அறிவிப்பை இடைநிறுத்தி வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
பார்சிலோனாவில் உள்ள அந்தப் பிராந்தியத்தின் நாடாளுமன்றத்திடம், உடனடியாக பிரிந்து செல்வதைவிட, ஸ்பெயின் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில், வாக்கெடுப்பின் முடிவுகளை இடைநிறுத்தம் செய்து வைக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
எனினும், “இந்த வரலாற்றுத் தருணத்தில், தனி நாடாக விரும்பும் மக்களின் விருப்பத்தை பின்பற்றவே நானும் விரும்புகிறேன்,” என்று தனது உரையில் அவர் கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டிலிருந்து எதிர்ப்பு குரல்கள் ஓங்கி ஒலித்தபோதும், கேட்டலோனியா தனி நாடாக பிரியும் என்ற அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தனி நாடு விவகாரத்தில் பதற்றத்தைத் தனிக்கவே தாம் விரும்பியதாகக் கூறியுள்ளார்.
“ஸ்காட்லாந்து தனி நாடக கோரிக்கை வைக்கப்பட்டபோது, நடத்தப்பட்ட வாக்கெடுப்பைப் போல ஒரு வாக்கெடுப்பையே நாங்கள் 18 முறை கேட்டோம். ஆனால், அது தொடர்ந்து மறுக்கப்பட்டது, ” என்று கூறியுள்ளார்.
2014-இல் நடந்த ஸ்காட்லாந்து சுதந்திர வாக்கெடுப்பு, 55% மக்கள் தனி நாடக பிரிவதற்கு எதிராக வாக்களித்ததால் பிரிவினை கோரிக்கை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
கேட்டலோனியா ஸ்பெயின் நாட்டிலுள்ள தன்னாட்சி பிரதேசம் ஆகும். தன்னாட்சி பிரதேசமாக இருந்த கேட்டலோனியாவுக்கு, கடந்த 2005-ஆம் ஆண்டு, கேட்டலோனிய மொழி, வரி மேலாண்மை, நீதித் துறை நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், அப்பகுதிக்கு “நாடு” என்னும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி ஸ்பெயின் நாட்டு அரசியலமைப்பு திருத்தப்பட்டது. அந்தத் திருத்தத்தை ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு ரத்து செய்தது தனி நாடு கோரிக்கையை வலுபெறச் செய்தது.
கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் பிரிவினைக்கான ஆதரவு பெரும்பான்மையாக இருந்தாலும், ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட பெரும்பாலானோர் இதற்கு எதிராகவே உள்ளனர்.
“திரும்பி வர முடியாத பாதையை தேர்வு செய்ய வேண்டாம் என்றும், தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட வேண்டாம்,” என்றும் ஸ்பெயின் அரசு பூஜ்டியமோனுக்கு அறிவுறுத்தி இருந்தது.
நாடாளுமன்றம் கூடுவதற்கு ஒரு மணி நேரம் கேட்டலான் கட்சியின் தலைவர்கள் கூடிப் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் அங்குள்ள பாதைகள் மூடப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 1ம் தேதி ஸ்பெனிலிருந்து கேட்டலோனியா மாகாணம் பிரிந்து தனிநாடாக அறிவிப்பது குறித்து நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 43% கேட்டலோனிய மக்கள் வாக்களித்தனர்.
வாக்களித்த 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்பெயினின் உச்சநீதிமன்றம் கேட்டலோனியாவின் பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பே செல்லாது என்று அறிவித்திருந்தது.
வாக்கெடுப்பிற்கு பிறகு கேட்டலோனியா மாகாணம் மட்டுமல்லாமல் ஸ்பெயினின் பார்சிலோனா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பேரணிகள் நடைபெற்றன.
-BBC_Tamil