இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு கடும் சிறைத் தண்டனையும், 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட அபராதமும் விதிக்கப்படும் என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக் கடற்படையினரின் பணிகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் வகையில் கலகங்களை முன்னெடுக்கும் இந்திய மீனவர்களுக்கெதிராக, கடற்படை சட்ட விதிமுறைகளுக்கமையவே எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் இரு நாடுகளதும் அமைச்சர்கள் மட்ட மூன்றாவது சந்திப்பு கடந்த வாரம் புதுடில்லியில் நடைபெற்றது. இதன்போதே, இலங்கை அரசாங்கம் சார்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் குழு, இந்திய அமைச்சர்கள் மட்ட பிரதிநிதிகளிடம் இவ்விடயங்கள் தொடர்பில் அறிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அமைச்சர் அமரவீர, இச்சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டை நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மீன்பிடி அமைச்சில் நடத்தினார். இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் நடைமுறையிலுள்ள பொட்டம் ட்ரோலிங் சட்டத்திற்கமைய தற்போது சுமார் 25 ஆயிரம் ரூபா வரையிலான தண்டப்பணமே அறவிடப்படுகிறது. எனினும், இதில் செய்யப்படவுள்ள வெளிநாட்டுப் படகு சட்டமூல திருத்தத்திற்கமைய படகுகளின் நீளத்துக்கேற்ப பெருந்தொகை தண்டப்பணம் அறவிடப்படும். இதன்படி செலுத்தப்பட வேண்டிய அபராதம் 100 மில்லியன் ரூபாவிற்கும் மேற்படலாமென்றும் இலங்கைத் தரப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் இந்திய அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பில் இரு தரப்பினருக்குமிடையில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்தல் மற்றும் படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்தியாவுக்கு நாம் உறுதியாக கூறியுள்ளோம்.
“பொட்டம் ட்ரோலிங்” கடல் வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அதற்கமைய எதிர்காலத்தில் பொட்டம் ட்ரோலிங் செய்வதற்கு அனுமதி வழங்கப்படாதென்றும், ஏற்கனவே அத்துறையில் ஈடுபட்டோருக்கு மாற்று தொழில் அறிமுகம் செய்யப்படுமென்றும் இந்திய தரப்பினர் வழங்கிய வாக்குறுதிகள் சந்திப்புக்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
இலங்கை படகுகளில் வி.எம்.எஸ் பொருத்தப்பட்டிருப்பது போன்று இந்திய படகுகளிலும் அவை பொருத்தப்பட வேண்டுமென இலங்கை தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய தரப்பு, விரைவில் முதற்கட்டமாக ஆயிரம் படகுகளுக்கு வி.எம்.எஸ் பொருத்துவதற்கு இணங்கியுள்ளது.
நல்லிணக்க அடிப்படையில் இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன் பிடிப்படகுகளை இலங்கை அரசாங்கம் விடுவித்தமையை இந்தியா பாராட்டியுள்ள அதேநேரம், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள மீன் பிடிப்படகுகள் பாவனைக்கு உட்படுத்தப்படாதிருப்பதால் எதிர்காலத்தில் கைப்பற்றப்படும் மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பாக வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அக்கோரிக்கையை ஏற்க இலங்கை மறுத்தது.
இலங்கையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இந்தியாவுக்கூடாக செல்ல அனுமதிக்குமாறும் இலங்கை தரப்பு இச்சந்திப்பின்போது இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.” என்றுள்ளார்.
-puthinamnews.com