மேரிவானா எனப்படும் போதைப்பொருளை மருத்துவக் காரணங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை பெரு நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்து நிறைவேற்றியுள்ளது.
இதன்மூலம் பெரு, அப்போதைப்பொருள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஆறாவது லத்தீன் அமெரிக்க நாடாகியுள்ளது.
கஞ்சா எண்ணெய் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவை இதன்மூலம் சட்டபூர்வமாகியுள்ளது.
மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த தங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக, ஒரு தற்காலிக ஆய்வகத்தில், கஞ்சாவில் இருந்து எண்ணெயை பிரித்துக்கொண்டிருந்த சில பெற்றோர்களை, காவல் துறையினர் கைது செய்தபின், கடந்த பிப்ரவரி மாதம் மேரிவானாவை மருத்துவத்திற்காக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை பெரு நட்டு அரசு முன்மொழிந்தது.
போதைப்பொருள் கடத்தலுக்கு இந்த சட்டம் பச்சை விளக்கு காட்டியுள்ளதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். -BBC_Tamil