நிலைமாறும் உலகில் புலம்பெயர் தமிழர்கள்

உலகம் எங்கும் பரந்து வாழும் சமுதாயம் என்பதில் பெருமை கொண்டு வாழ்வது,  தமிழ் சமுதாயம் ஆகும்.  உள்நாட்டு யுத்தத்தால் ஈழத்தமிழர்கள் நாடுகள் பல கடந்து வாழ்கின்றனர். ஆனால், பல பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து வேலையாட்களாகவும் போர் வீரர்களாகவும் இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாடுகளிலேயே தேசியம் பேசும் சுதேசிகளாக மாறி வாழ்கின்றனர்.

உதாரணமாக மலேசியா, சிங்கப்பூர், மொறீசியஸ்  உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள தமிழர்கள் தற்போது தமது மூதாதையர் குடிபெயர்ந்து வாழ்ந்த நாடாக தாம் வாழும் நாட்டை பாராட்டுகின்றனர். அவர்கள் எல்லோரது பரம்பரைகளும் முன்பு ஒருகாலத்திலே பாக்கு நீரிணை சார்ந்ததாகவே இருந்திருக்கிறது.

காலப்போக்கில் இதே மக்கள் தமிழக அரசியலிலோ அல்லது சிறிலங்கா அரசியலிலோ தலையிடுவது, வெளிநாட்டு அரசியலில் தாம் தலையிடுவது நல்லதல்ல என்ற மனப்பாங்கை கொண்டிருப்பதை பார்க்க கூடியதாக இருக்கிறது.

காலனித்துவ காலத்தில் ஒல்லாந்தர்களாலும் போத்துகீசியர்களாலும் பிரான்சியர்களாலும் பிரித்தானியர்களாலும் தமிழ்தொழிலாளர்கள் இந்து சமுத்திரத்தை அண்டிய தீவுகளுக்கும் இதர சமுத்திரங்களில் அமைந்திருந்த காலனித்துவ நிலைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு குடியமர்த்தப்பட்டவர்கள் இன்று புலம்பெயர்ந்தவர்களாக அல்லாது அந்த காலனித்துவ நிலைகளையே தமது சொந்த தேசமாக எண்ணி வாழ்கின்றனர்.

ஆனால் தற்போது சர்வதேச அரசியல் நிலை மாறிய போக்கிற்கு ஏற்ப இந்திய மத்திய அரசில் இருக்கும் கொள்கை வகுப்பாளர்கள் கிழக்குப் பார்வை (Look East) என்ற அயலுறவுக் கொள்கை பதத்தின் அடிப்படையில் ஆசியான் நாடுகளுடன் நல்லுறவை வைத்து கொள்ளும் நோக்கத்திற்கு இந்திய வம்சாவளியினரை தமது கொள்கைகளுக்கான காரணிகளில் ஒன்றாக காட்ட முனைகின்றனர்.

இந்தியா சார்பான, கிழக்காசிய சர்வதேச அரசியலின் விதியை நிர்ணயித்தவர்களாக The norm- builders இந்திய வம்சாவளியினரை, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பார்க்கின்றனர். காலனித்துவ காலத்தில் கிழக்கு நாடுகளில் குடியேறிய தென் இந்திய அல்லது இலங்கை தமிழ் இனத்தவர்கள், இந்திய பண்பாட்டை அந்த நாடுகளில் மகிழ்வும் வீரியமும் மிகக்கொண்டு பாராட்டி வருகின்றனர். ஆனால் தற்கால இந்தியா இதே மக்களை பண்பாட்டு தொடர்பாளர்களாக மட்டுமல்லாது, இராசதந்திர தொடர்புகளுக்கான காரணிகளாகவும்  உபயோகிக்கிறது.

தமது தாயகமாக குறிப்பாக மலேசியா சிங்கப்பூர்,  பிஜி போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் புலம்பெயர் மக்கள் என்ற நிலையிலிருந்து வேறுபட்ட நிலையை அடைந்திருப்பதை கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. நாம் இருக்கும் தேசம் எம்மால் கட்டிஎழுப்பப்பட்டது என்ற உரிமை அவர்களுக்கு இந்த  எண்ணப்பாட்டை உருவாக்கி இருக்கிறது. இவர்களது பண்பாடு தேசத்துக்கு ஏற்றாற்போல் அங்கு கிடைக்கப்பெறும் வளங்களுக்கு ஏற்றாற்போல் மாறியுள்ளது.

ஆனால் 1980களிலும் 1990களிலும் அதற்குப் பிறகும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் கனேடிய தேசத்தில் ரொறன்ரோ நகரில் மிக விமரிசையாக நடத்திய தெருவிழா இந்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.  இந்த தெருவிழா இந்திய தேசிய அல்லது சிறிலங்கா தேசிய பண்புகளுக்கு அப்பால் தமிழ் தேசியத்தை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டிருந்தது.

புலம்பெயர் தமிழர்களின் இந்த தெருவிழா, மலேசியா, சிங்கப்பூர் , மொறீசியஸ் போன்ற நாடுகளில் காலனித்துவ காலத்தில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மதம் சார்ந்து விழாக்கள் எடுப்பது போல் அல்லாது  மாறுபட்டதாக தெரிகிறது.  கனேடியப் பிரதமர் மட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் விழாவாக இது காணப்பட்டது. இந்த விழாவானது  இந்திய சிறிலங்கா ஆட்சி தரப்பு சிந்தனையாளர்கள் மட்டத்தில் நிச்சயம் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய விழாக்களும் காலப்போக்கில் அடுத்தடுத்த பரம்பரைகளின் கைக்கு போனதும்  ஈழத்தமிழர் தேசியம் என்ற பார்வை மாறிப்போய் , கனடாவில் தமிழர் பாரம்பரியத்தின் சிறப்பு என்பதாக  அமைந்து  போகும் என்ற ஐயம்  உள்ளது. ஏனெனில் அங்கே கனேடிய தேசியத்தை வளர்ப்பதிலும், பல்சமுதாய தனித்துவத்தை கொண்ட கனேடிய தேசியத்தில் தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளம் என்ற நிலையை காட்டும் தன்மை அதிகமாக உள்ளதான பார்வை ஒன்று உள்ளது.

இந்த பார்வையைக் கருத்தில் கொண்டு புலம்பெயர் மக்கள் மத்தியில் தாயக தேசியம் எவ்வாறு பேணப்படுகிறது என்பது குறித்து பல்வேறு சமுதாயங்கள் குறிப்பாக புலம்பெயர் சைப்பிரஸ்  மக்கள், புலம்பெயர் இத்தாலிய மக்கள், புலம் பெயர் யூதமக்கள் ஆகிய சமுதாயங்கள் மத்தியிலும் அமைந்துள்ள திட்டங்கள் குறித்து ஆராயப்பட்ட போது  யூதர்களின் திட்டம் ஒன்று மிகவும் பொருத்தமான ஒன்றாக தெரிகிறது.

இதைவிட மேலும் பல இலாப நோக்கம் அற்ற நிறுவனங்கள் தத்தமது சமுதாயத்தின் மத்தியில் பரீட்சார்த்தமாக தமது நாடுகளில் இருந்து வெளியேறிய புலம்பெயர் மக்களை பொருளாதார, அரசியல், பண்பாட்டு விடயங்களை கையாளும் வகையிலான சந்தர்ப்பங்களை உருவாக்கும் சேவையை செய்து வருகின்றன.

தாயகத்துடன் புலம்பெயர் மக்களை இணைக்கும் மூலோபாயங்களில் Taglit-Bright right  என்ற அமைப்பினால் இளம் யூத சமுதாயத்தினரை பிறந்த நாட்டு தேசிய வாழ்விலிருந்து புலம்பெயர் தேசிய வாழ்வு மனோநிலைக்கு கொண்டு வரும் மூலோபாய திட்டம் Diasporization strategy வகுக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது.

சமூக கட்டுமானத்தை உருவாக்குதல், மீள் தயார்ப்படுத்தல், புலம்பெயர் மனோயியல் அடையாளத்திற்கு மாற்றி அமைத்தல்  போன்ற சேவைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு உள்ளது.

தாய்நாட்டில் சுற்றுலா பயணம் என்ற வகையிலான முயற்சியின் ஊடாக புலம்பெயர் சமுதாய தேசிய அடையாளத்தை கட்டி அமைத்தல் எனும் இந்த முயற்சி,  சர்வதேசம் எங்கும்  எல்லைகள் கடந்து பரந்து வாழும் புலம்பெயர் இளைய சமுதாயத்தினரை அவரவர் பிறந்த நாடுகளில் ஏற்கனவே பரிச்சயம் ஆகிவிட்ட தேசிய வாழ்கை, பண்பாடு ஆகிய வற்றிலிருந்து தமது தாய் தந்தையர் அல்லது முன்னோர்கள் வாழ்ந்த தாய்நாட்டிற்கு இயல்பு மாற்றம் பெறவைக்க கூடியதானதாகும்.

இதன் வெற்றியின் அளவு குறித்த ஐயப்பாடுகள் ஆரம்பத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், நிகழ்காலத்தில் இளையவர்கள் மத்தியிலும், மத்திய தர வயதினர் மத்தியிலும்  மிகவும் தாக்கம் விளைவிக்கக் கூடியதாக இருப்பதாக இந்த தாய்நாட்டு சுற்றுலா சென்று வந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டநேர்காணல் புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.

தொண்ணுறுகளில் யூதர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு புள்ளிவிபரக் கணிப்பீட்டின்படி இளம் சமூகத்தினர் வேறு சமூகத்து துணைகளைத் தேடிக் கொள்வதில் அதிக நாட்டம் காண்பது தெரிந்து கொள்ளப்பட்டது. இதனால் யூத இனத்தின் தொடர்ச்சி கேள்விக்குரியதாக உருமாறுவதாக அந்த இன ஆய்வாளர்கள் சிலர் அறிக்கைகள் தயாரித்தனர்.

இந்த அறிக்கைகளிலே மாற்று இனங்களுக்குள் திருமணம் புரிதல் சமூகத்திற்கு மிகவும் தாக்கம் விளைவிக்கும் காரணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. சமய வழிபாட்டு முறைகளின் அறிவு மிகவும் வீழ்ச்சியை கண்டு வருவது கண்டறியப்பட்டது. மொழியின் எதிர்காலம் மிகப்பெரும் தாக்கத்துக்கு உள்ளாகியது.

இதன் பொருட்டு சமூக  ஆர்வலர்களால் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. பலர் மேலை நாடுகளில் யூத சமூக வளர்ச்சியை சீர்படுத்தும் விதமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். இதன் மூலம் சமூகக் கல்விக்கான பல்வேறு சலுகைகள் உருவாக்கப்பட்டன. இதைவிட மேலும் பல திட்டங்கள் முன் கொண்டு வரப்பட்டது.

குறிப்பிட்ட இந்த முயற்சி இஸ்ரேலை நோக்கியது ஆகும் . Taglit-Brightright என்ற வட அமெரிக்க யூத சமூக அமைப்பினால்  தமது இனத்ததில் உள்ள 18 வயதிலிருந்து 26 வயதான இளைஞர் யுவதிகளை இஸ்ரேலுக்கு கொண்டு சென்று யூதாவியல் ( Judaism) சமய கருத்துகளை கூறுதல், பண்பாடு குறித்த  விளக்கங்களை தெளிவு படுத்துதல், கலாச்சார விளக்கங்களை கூறுதல் என்பன உட்பட  யூத வரலாறு,  அவர்களுடைய தற்கால வளர்ச்சி, ஆகியவற்றுடன் யூத சரித்திரத்தி்ல் இடம் பெற்ற பல்வேறுபட்ட ஞாபகார்த்த இடங்கள் குறித்த விளக்கச் சித்திரிப்புகள் ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் வாழ்க்கைச் சரித்திரங்கள், சம்பவங்கள் குறித்த விளக்கங்களை மனம் உருகும் வகையிலாக சித்தரித்தல் என்பன இங்கே இடம் பெறுகிறது. இதிலே முக்கியமானது இஸ்ரேலிய சியோனிசத்தின் உயிரோட்டத்தை சித்தரிக்கும் சம்பவங்களான மசடா மலையின் கதைகள்  பெருமாற்றத்தை ஏற்படுத்துவதாக இந்த தேசிய மாற்ற பயணத்தில் ஈடுபட்ட பல பயணிகள் கூறி உள்ளனர்.

மசடா மலையில், கிறிஸ்தவ வேதாகம நூல் காலத்தில் யூத ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக எதிரியின் சுற்றிவளைப்புக்குள் ஆளாகிய போது அவர்கள் கூட்டாக தற்கொலை செய்வது என்றும்  எதிரியிடம் பிடிபடக் கூடாது என்றும் முடிவெடுத்தனர். இதன்போது இடம்பெற்ற சோக நிகழ்வுகளின் சித்தரிப்பும், அங்கே ஆதிகால யூதர்களால் பாவிக்கப்பட்ட நூதனப் பொருட்களும்  ஆதாரமாக காட்டப்படுவதும் இந்த தேசிய மன மாற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

மசடா மலையின் மகத்துவம் பற்றி அங்கே மேலைநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு யூத இளைஞர் யுவதிகள் மத்தியில் இன்றும் இஸ்ரேலிய அரசின் பாதுகாப்பும், யூத மக்களின் சுதந்திரமும் அவர்களுக்கான பாதுகாப்பின் உறுதிப்பாடும் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் இனியும் ஒருமுறை மசடா மலை எதிரியின் கைகளில் வீழ்ந்து விடாது பாதுகாப்பது நம் எல்லோரதும் கடமை .

மீண்டும் ஒருமுறை யூதர்களின் வாழ்க்கை அழிவுக்கு உள்ளாவதை ஏற்று கொள்ள முடியாது என்று எல்லோரும் சத்தியம் செய்து கொண்டு அவர்களது பயணம் தொடர்கிறது.  மேலும் தனிப்பட்டவர்களின் கதைகளும் இங்கே சொல்லப்பட்டு  புலம்பெயர்  யூத இளம் சமுதாயத்தை  இஸ்ரேலிய தேசியத்தின் பால் வைத்திருப்பதற்கு மிகப்பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நிலை மாறும் உலகிற்கு ஏற்றவாறு இங்கே பல்வேறு புலம்பெயர் சமுதாயங்களும் தமது தேசியத்தையும் அதன் உயிர்வாழ்வையும் பாதுகாப்பதில் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளநிலையில் தமிழ் சமுதாயம் மட்டும் போகும் இடம் எல்லாம் தமது தேசியத்தையும் மொழியையும் பறிகொடுத்து செல்வது சரியானதாக தெரியவில்லை.

2009ஆம் ஆண்டிலிருந்து  நிலைமாறும் உலகத்தில் தமிழ் மக்களது செயற்பாடுகளை நீர்த்துப்போகச் செய்வதில் எவ்வாறு பல்வேறு சக்திகளும் செயற்படுகின்றன. இதில் மேலைதேய அரசியல் விதி தமிழின விடுதலையை  ஏன் ஏற்று  முடியாது உள்ளது என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

‘புதினப்பலகை’க்காக லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

TAGS: