ஸ்பெயின் அரசுக்கு கேட்டலன் தலைவர் சவால்

வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள கேட்டலோனிய பிராந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரிவினைவாதத் தலைவர்கள் போட்டியிடுவார்கள் என்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் கூறியுள்ளார்.

பிரஸ்ஸல்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஸ்பெயின் அரசு நடத்தவுள்ள அந்தத் தேர்தலின் முடிவுகளை மதித்து நடப்போம் என்று கூறியதுடன், அதேபோல் நீங்களும் மதித்து நடக்க வேண்டும் என்று ஸ்பெயின் அரசுக்கு அவர் சவால் விடுத்தார்.

பெல்ஜியம் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி தான் பிரஸ்ஸல்ஸ் வரவில்லை என்று கூறிய பூஜ்டிமோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரில் தனது குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

ஸ்பெயின் அரசின் அத்துமீறல் என்று தான் கூறும் இந்த பிரிவினை விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடாவிட்டால், அனைவரும் மிகவும் அதிகமான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

கேட்டலோனியா அறிவித்த சுதந்திர பிரகடனம் செல்லாது என்று, வெள்ளியன்று மாட்ரிட்டில் உள்ள அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்தது. -BBC_Tamil