ஸ்பெயினில் உள்ள கேட்டலோனிய தன்னாட்சிப் பிராந்தியத்தை தனி நாடாக அறிவிப்பதற்காக, கடந்த அக்டோபரில் கேட்டலோனியாவின் பிராந்திய அரசு நடத்திய பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்காற்றியதற்காக, கலைக்கப்பட்ட பிராந்திய அரசில் அங்கம் வகித்த எட்டு தலைவர்களை ஸ்பெயின் உயர் நீதிமன்றம் சிறை வைத்துள்ளது.
கலகம் செய்தல், தேச துரோகம் மற்றும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது கேட்டலோனியத் தலைவர்கள் வியாழன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலன் அரசின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு தலைவர்கள் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை நிராகரித்தனர்.
இந்த விசாரணை ‘அரசியல்’ நோக்கம் கொண்டது என்று, தற்போது பெல்ஜியம் நாட்டிலுள்ள, பூஜ்டிமோன் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட, அந்த வாக்கெடுப்பு நடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஸ்பெயினில் அரசியல் நெருக்கடி நிலவுகிறது.
கேட்டலோனிய பிராந்திய நாடாளுமன்றத்தை கலைத்து, கடந்த வாரம் அங்கு ஸ்பெயின் மத்திய அரசின் நேரடி ஆட்சியை அமல்படுத்திய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய், அங்கு வரும் டிசம்பர் 21 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
நீதிமன்ற விசாரணைக்கு வந்த ஒன்பது கேட்டலோனிய தலைவர்களில் எட்டு பேரை சிறையில் அடைக்க ஸ்பெயின் அரச வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களில் கலைக்கப்பட்ட கேட்டலோனிய அரசில் துணை அதிபராக இருந்த ஓரியோல் ஜன்குரா, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோக்குயின் ஃபோர்ன், வெளியுறவு விவகாரங்களுக்கான தலைவராக இருந்த ரால் ரொமேவா ஆகியோர் அடக்கம்.
ஒன்பதாவது நபரான கேட்டலோனியாவின் முன்னாள் வர்த்தக அமைச்சர் சேண்டி விலா, பிராந்திய நாடாளுமன்றம் கேட்டலோனியாவை தனி நாடாக பிரகடனம் செய்வதற்கு முன்பே பதவி விலகிவிட்டதால் அவருக்கு 50,000 யூரோ பணம் பெற்றுக்கொண்டு பிணை வழங்கலாம் என்று வழக்கறிஞர்கள் கூறினர்.
அதன்படி அவருக்கு பிணை வழங்கப்பட்டது. -BBC_Tamil