20 பயங்கரவாத இயக்கங்கள் பெயரை பாகிஸ்தானிடம் அமெரிக்கா வழங்கியது

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கையை எடுக்கவேண்டும் இல்லையெனில் அமெரிக்காவே நேரடியாக களமிறங்கும் என டொனால்டு டிரம்ப் அரசு எச்சரிக்கையை விடுத்து உள்ளது.

பாகிஸ்தானில் செயல்படும் தலிபான், அல்-கொய்தா, ஹக்கானி நெட்வோர்க், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் தாக்குதல்களை முன்னெடுக்கிறது. பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் அந்நாட்டு பயங்கரவாத இயக்கங்கள் நடத்தும் தாக்குதல்களை இந்திய ராணுவம் திறன்பட எதிர்க்கொண்டு முறியடிக்கிறது. ஆப்கானிஸ்தானில் நிலை வேறு, ஹக்கானி மற்றும் தலிபான் பயங்கரவாத இயக்கங்கள் பாதுகாப்பு படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி, பலரை கொன்று குவித்து வருகிறது.

முக்கியமாக பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் மத்தியில் பாதுகாப்பாக இருந்து கொண்டு ஹக்கானி நெட்வோர்க் ஆப்கானிஸ்தானில் கொடூரத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

பாகிஸ்தானில் பயங்கரவாதம் என்ற விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் அரசு பிடியை மேலும், மேலும் இறுக்கி வருகிறது. இப்போது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய 20 பயங்கரவாத இயக்கங்களின் பெயரை பாகிஸ்தானிடம் அமெரிக்கா கொடுத்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாத இயக்கங்கள் என மூன்றாக பிரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது என தூதரக தகவல்கள் தெரிவிப்பதாக டான் செய்தி வெளியிட்டு உள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய அளவில் செயல்படும் பயங்கரவாத இயக்கம் என அமெரிக்கா அடையாளம் கண்டு உள்ளது. இந்த பயங்கரவாத இயக்கம் 1987-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தால் உருவாக்கப்பட்டது. இதனுடைய தலைமையகம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முரித்கேயில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத இயக்கம் காஷ்மீரில் கவனம் செலுத்துகிறது என அமெரிக்கா பட்டியலிட்டு உள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-dailythanthi.com