பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கடந்த ஆண்டு கொடுத்திருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பது குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும், சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து மதிப்பீடு செய்வதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் குழு சிறிலங்கா வந்துள்ளது.
நேற்று முன்தினம் கொழும்பு வந்த ஜீன் லம்பேர்ட் தலைமையிலான நான்கு பேர் கொண்ட, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு நேற்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தது.
இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீன் லம்பேர்ட்,
“கடந்த 2016ஆம் ஆண்டு இங்கு வந்த போது, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அனைத்துலக மனித உரிமைகள் தர நியமங்களுக்கு ஏற்ற சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா அரசாங்க உயர்மட்டம் உறுதியளித்திருந்தது.
அதனைச் செய்ய வேண்டும் என்று நாம் கூறியிருந்தோம். விரைவான மாற்றம் இடம்பெறும் நாங்கள் எண்ணியிருந்தோம், ஆனால் நடக்கவில்லை.
வரவுசெலவுத் திட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் நாடாளுமன்றம் இந்த சட்டத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
கடந்த முறை எமது பயணத்தின் போது காணப்பட்ட நிலையை விட இம்முறை நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
சிறிலங்காவில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, மனித உரிமைகள் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் போன்றவற்றில் முன்னேற்றங்களை ஐரோப்பிய நாடாளுமன்றம் எதிர்பார்க்கிறது.
மறுசீரமைப்புகளின் வேகத்தை குறைக்கக் கூடாது என்று அரசாங்கத்திடம் கூறியுள்ளோம். அது மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். -BBC_Tamil