பதவியில் இருந்து அகற்றப்பட்ட கேட்டலோனியா தலைவர் சார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் ஆலோசகர்களும் தானாக பெல்ஜியம் போலீஸார் முன்பு ஆஜராகியுள்ளதாக பெல்ஜியம் அரசு வழக்கறிஞரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று ஸ்பெயின் நீதிபதி ஒருவர் பிறப்பித்த ஐரோப்பிய ஒன்றிய அளவிலான கைதாணையை செயல்படுத்துவதா என்பதைத் திங்கட்கிழமை காலை விசாரணை நீதிபதி முடிவு செய்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
கேட்டலோனியா நாடாளுமன்றம் சுதந்திரத்தை அறிவித்தவுடன், ஸ்பெயினின் மத்திய அரசு அங்கு நேரடி ஆட்சியை அமல்படுத்திய பிறகு, பூஜ்டிமோன் பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றார்.
முறையான விசாரணை நடக்கும் என்று உறுதி கிடைக்கும் வரை ஸ்பெயின் திரும்பமாட்டேன் என்று பூஜ்டிமோன் கூறி இருந்தார்.
பூஜ்டிமோன் மீதும், அவரது நான்கு கூட்டாளிகள் மீதும் அரசுக்கு எதிராகக் கலகம் செய்தல், தேசத்துரோகம் மற்றும் மக்களின் பணத்தை கேட்டலன் சுதந்திரம் பெறுவதற்காகத் தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
தங்களது வழக்கறிஞர்களுடன் பூஜ்டிமோன் மற்றும் அவரது நான்கு கூட்டாளிகளும் பெல்ஜியம் போலீஸாரிடம் ஆஜரானதாக பெல்ஜியம் அரசு வழக்கறிஞர்களின் செய்தி தொடர்பாளர் கில்லெஸ் தேஜம்பேப் கூறினார்.
இவர்கள் விசாரணை நீதிபதியால் விசாரிக்கப்படுவார்கள் என்றும், இவர்களைக் காவலில் வைப்பதா அல்லது நிபந்தனை பிணையில் விடுவிப்பதா என்பதை 24 மணி நேரத்தில் நீதிபதி முடிவு செய்வார் என கில்லெஸ் கூறுகிறார்.
இவர்களைக் கைது செய்ய நீதிபதி முடிவு செய்தால், அதிகபட்சம் 60 நாட்களில் இவர்களை ஸ்பெயினிடம் பெல்ஜியம் ஒப்படைக்க வேண்டும். இவர்கள் எவ்வித சட்ட ஆட்சேபனைகளும் தெரிவிக்கவில்லை என்றால், விரைவிலே ஸ்பெயின் அரசிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
இந்நிலையில், ஸ்பெயின் மத்திய அரசால் கேட்டலோனியா அதிகாரிகளும், செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டதை கண்டித்து பார்சிலோனா நகரத்தில் போராட்டங்கள் நடந்தன. -BBC_Tamil