ஊழலுக்கு எதிரான புதிய குழுவின், களையெடுப்பில், சௌதியின் 11 இளவரசர்கள், ஆட்சியில் உள்ள நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜன்களுக்கு அதிகமான முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அரசாணையின்படி, சௌதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னெடுத்து செல்லும், இந்த புதிய குழு, அமைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த கைது நடந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் இன்னும் வெளிவரவில்லை.
பிபிசியின் பாதுகாப்புத்துறை செய்தியாளரான ஃபிராங்க் கார்ட்னர், இளவரசன் முகமது, பல சீர்திருத்த திட்டங்களை கொண்டுவரும் இதே வேளையில், வளர்ந்துவரும் தனது சக்தியை ஒருமுகப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார் என்கிறார்.
கைது செய்யப்பட்டவர்கள் எந்த காரணத்திற்காக கைதகியுள்ளனர் என்று தெளிவாக தெரியவில்லை. இருந்த போதும், சௌதியின் செய்தி ஒளிபரப்பு நிறுவனமான அல்-அராபியா, 2009ஆம் ஆண்டு, ஜெட்டாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் 2012 ஆம் ஆண்டில் சௌதியில் பரவிய மெர்ஸ் வைரஸ் குறித்து புதிய விசாரணை துவங்கியுள்ளதாக குறிப்பிடுகிறது.
அரசின் கீழ் இயங்கும், சௌதி ஊடக நிறுவனம், இந்த புதிய குழுவால், கைது ஆணை பிறப்பிக்க முடியும் என்றும், வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்யவும் முடியும் என தெரிவிக்கிறது.
உயர்பதவிகளில் உள்ளவர்களின் பதவி நீக்கத்தை பொருத்தவரையில், சௌதியின் தேசிய பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரியும், கடற்படை தலைமை அதிகாரியும் தனித்தனியே மாற்றப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சரான இளவரசர் மிதெப் பின் அப்துல்லாவையும், கடற்படை கமாண்டர் அட்மிரல் அப்துல்லா பின் சுசுல்தான் பின் முகமது அல்-சுல்தானையும் மன்னர் சல்மான், பணிநீக்கம் செய்துள்ளார் என எஸ்.பி.ஏ தெரிவிக்கிறது.
எதற்காக இவர்கள் நீக்கப்பட்டனர் என்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.
முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மகனான இளவரசர் மிதெப், அரியாசனத்திற்கான போட்டியாளராக பார்க்கப்பட்டார். அப்துல்லா குடும்பத்தின் கடைசி உறுப்பினராக, சௌதி அரசில், அதிக ஆற்றல்கள் உள்ள நிலையில் உள்ளவராக பார்க்கப்பட்டார்.
ஏற்கனவே பாதுகாப்புத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் இளவரசர் முகமது, நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு படைகளின் மீது தனது கட்டுப்பாட்டை செலுத்துவதாக, பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இளவரசர் முகமது, சமீபத்தில், நவீனமயமாக்கப்பட்ட சௌதி அரேபியாவிற்கான கடவுச்சாவியாக நவீன இஸ்லாம்
இருக்கும் என்றார்.
ரியாத்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், தீவிரவாதத்தின் எச்சங்களை முழுமையாக அழிப்பேன்` என்றும் அவர் தெரிவித்தார். -BBC_Tamil