டெக்சஸ் மாகாணத்தின், வில்சன் கவுண்டியில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு, தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைக்கான பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர், மக்களை நோக்கி சுடத்துவங்கியுள்ளார்.
தேவாலத்தின் உள்ளே 23 பேரும், வெளியே இருவர் இறந்து கிடந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், ஒருவர் மருத்துவமனையில் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கையை, ஆளுநர் கிரேக் அபோட் உறுதி செய்துள்ளார். டெக்சஸின் வரலாற்றிலேயே, மிக மோசமான மற்றும் பெரிய துப்பாக்கிச்சூடாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
`வருத்தத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு நீண்ட, பெரிய சோகமாக இருக்கும்’ என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
டெக்சஸின் பொதுபாதுகாப்புத்துறையின் பிராந்திய இயக்குநர் ஃப்ரீமென் மார்ட்டின், இறந்தவர்கள் 5 முதல் 72 வயது வரையில் உள்ளனர் என்றும், குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதால், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர், இளம் வெள்ளை இன ஆண் என்றும், அவர் 20 வயதை தாண்டியவர் என்றும், கைகளில் பெரிய துப்பாக்கியுடனும், பாதுகாப்பிற்கான உடைகளையும் அணிந்து இருந்ததாக ஃப்ரீமென் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
அவர், தேவாலயத்தின் உள்ளே நுழைவதற்கு முன்பு, வெளியேவும் துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய நபரை பொதுமக்களில் ஒருவர் துரத்தி சென்றுள்ளார், அவரின் வாகனம், குவாடலூப் கவுண்டி வழியில் இடித்து நின்றுள்ளது.
சந்தேகத்திற்குரியவர், அந்த வாகனத்தில் இறந்த நிலையில், காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் தானாக சுட்டுக்கொண்டு இறந்தாரா அல்லது, அவரை துரத்தி வந்தவர் சுட்டதில் இறந்தாரா என்பது சரியாக தெரியவில்லை என்றும் மார்ட்டின் தெரிவித்தார்.
துப்பாக்கி ஏந்திய நபர், 26 வயதாகும் டெவின் பி கெல்லே என்பது தெரியவந்துள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் குறித்து, அமெரிக்க அதிபர் டுவிட்டர் பதிவு செய்துள்ளார். -BBC_Tamil