கேட்டலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் அமைச்சர்களை நிபந்தனையுடன் விடுவித்தார், பெல்ஜியம் நீதிபதி.
அனுமதியின்றி அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்றும், அவர்கள் எங்கே தங்க உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை கண்டிப்பாக அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நீதிபதி, ஐரோப்பிய பிடி ஆணையை பிறப்பித்ததை தொடர்ந்து, அவர்கள் தாமாகவே பெல்ஜியம் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
கேட்டலோனியாவின் சுதந்திர பிரகடனத்தை தொடர்ந்து, ஸ்பெயின் கேட்டலோனியா மீது நேரடி ஆட்சியை செலுத்தியதால், பூஜ்டிமோன் அங்கிருந்து பெல்ஜியத்திற்கு சென்றார்.
நியாயமான விசாரணை நடைபெறும் என உத்தரவாதம் அளிக்கப்படும் வரையில், நாட்டிற்கு திரும்ப மாட்டேன் என அவர் என தெரிவித்திருந்தார்.
இந்த ஐவர் மீதும், புரட்சி, தேசதுரோகம் மற்றும் பொதுமக்கள் நிதியை தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது அவர்கள் பெல்ஜியம் நீதிமன்றத்தில் 15 நாட்களில் ஆஜராக வேண்டும். அவர்களை ஸ்பெயினிடம் ஒப்படைக்க, பெல்ஜியத்திற்கு 60 நாட்கள் வரை உள்ளன. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் வரவில்லை என்றால், அதற்கு முன்பாகவே கூட பெல்ஜியம் அவர்களை ஒப்படைக்கும்.
`ஐந்து பேரையும் தற்காலிகமாக விடுவிக்க வேண்டும் என்று, பிரஸில்ஸின் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதிபதி அனுமதி அளித்துள்ளார் என்று, அரசு வழக்கறிஞர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.
பூஜ்டிமோன் சரணடைந்துள்ளது என்பது, நாட்டைவிட்டு தப்பி செல்ல விருப்பமில்லாமல், ஒரு நியாயமான, ஒருதலைபட்சமற்ற விசாரணையில் தன்னை காத்துக்கொள்வதற்கான செயல். அவ்வாறு நடக்க பெல்ஜியத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளது, ஆனால் ஸ்பெயினில் சந்தேகம் தான்
என்று பூஜ்டிமோனின் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், கேட்டலோனிய நாடாளுமன்றத்தில், சுதந்திர பிரகடனம் செய்யப்பட்ட பிறகு, ஸ்பெயினின் பிரதமரான மரியானோ ரஜோய், கேட்டலோனியா மீது நேரடி ஆட்சியை அறிவித்தார். பூஜ்டிமோனை நீக்கி, நாடாளுமன்றத்தை கலைத்த அவர், டிசம்பர் 21 ஆம் தேதி உள்ளூர் தேர்தலையும் அறிவித்தார்.
மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலமாக இந்த சுதந்திர பிரகடனம் செய்யப்பட்டது. இந்த வக்கெடுப்பை ஸ்பெயின் நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்தது.
பூஜ்டிமோனுடன் சேர்த்து, முன்னாள் வேளாண்துறை அமைச்சரான மெரிட்சல் செர்ரெட், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான அண்டோனி கமின், முன்னாள் கலாசாரத்துறை அமைச்சர் லூயிஸ் பூட்ச் மற்றும் முன்னாள் கல்வியமைச்சர் கிளாரா பொன்சாட்டி ஆகியோரும், ஐரோப்பிய கைது ஆணையின் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள் அனைவருமே, தங்களின் வழக்கறிஞர்களுடன் பெல்ஜியம் காவல்துறையிடம் சரணடைந்ததோடு, 10 மணிநேரம் நீடித்த வழக்கு விசாரணையின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
ஸ்பெயின் அதிகாரிகளால், செயல்பாட்டாளர்களும், அதிகாரிகளும் காவலில் வைக்கப்பட்டதற்காக கேட்டலனின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
நீக்கப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக சித்தரிக்கும் வகையில், பல சுவரொட்டிகள் நகர் முழுவதும் நிறைந்திருந்தன.
கேட்டலோனியாவின் சுதந்திர பிரகனத்திற்கு தொடர்புடைய எட்டு அரசியல்வாதிகள், புரட்சி, தேசதுரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
வேறொரு விசாரணையில் இரண்டு செயல்பாட்டாளர்கள் நீக்கப்பட்டனர். -BBC_Tamil