காபூல்,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷம்ஷத் என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது. இந்த தொலைக்காட்சி அலுவலகத்திற்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த மூன்று மர்ம நபர்கள், கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதையடுத்து, ஷம்ஷத் தொலைக்காட்சி ஒளிபரப்பு முடங்கியுள்ளதாக, தொலைக்காட்சியில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் கூறியதாகவும் ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், தாக்குதல்காரர்களை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொலைக்காட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. வழக்கமாக ஆப்கானிஸ்தானில் இத்தகைய தாக்குதலை முன்னெடுக்கும் தலீபான் பயங்கரவாத இயக்கம், இந்த தாக்குதலுக்கும் தங்கள் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடப்பதாகவும் தற்போதைக்கு வேறு எதுவும் தகவல் எங்களிடம் இல்லை என்று ஆப்கானிஸ்தான் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தாலும் கூட, அவ்வப்போது, காபூலில் தாக்குதல் நடத்தப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில் 5 பேர் பலியாகினர் என்பது நினைவிருக்கலாம்.
-dailythanthi.com