பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைவதற்கு சிரியா தயாராகி வருவதாக தெரிவித்த பிறகு, அமெரிக்கா மட்டும் தனிமைப்பட்டு நிற்கிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகநாடுகளை ஒன்றிணைக்கிறது பாரிஸ் ஒப்பந்தம்.
நிகரகுவா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் மட்டுமே, 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும் , அதற்கு வெளியே இருந்தன. நிகரகுவா அக்டோபர் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஜூன் மாதம், ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கிக்கொள்வதாக தெரிவித்த அமெரிக்கா, ஒப்பந்தத்தில் உள்ள விதிகள் 2020வரை அவ்வாறு செய்ய முடியாது என கூறுவதால் விலக முடியவில்லை என்று கூறியது.
இதனிடையே, டிசம்பர் மாதம் பாரிஸில் நடக்கவுள்ள பருவநிலை மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இசைவை முன்னெடுத்து செல்ல, நிதி மற்றும் வணிக ரீதியான, கூட்டணியை கட்டமைக்க
இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்கின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் பருவநிலை மாற்ற இசைவை பொருத்தவரையில், சிரியா அரபு குடியரசின் அர்பணிப்பை நான் உறுதிசெய்ய விரும்புகிறேன்
என்று, சிரியாவின் சுற்றுச்சூழல்துறை இணையமைச்சர் வாதாஹ் கட்மவி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் பான் நகரில், 196 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற, தற்போதைய பருவநிலை குறித்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் இதை அவர் தெரிவித்தார்.
இந்த இசைவு, முடிந்த வரையில் விரைவாக
கையெழுத்திடப்படும் என்றார். மேலும், இந்த ஒப்பந்தத்தில் தங்களின் அர்ப்பணிப்பை தொடர்ந்து அளிக்க, வெளிநாட்டு உதவிகளையும் சிரியா பெறும் என்றார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில், சிரியா முதலில் தங்களின் ஒப்புதல் ஆவணங்களை அளிக்க வேண்டும் என ஐ.நா செய்திதொடர்பாளர் நிக் நட்டல் தெரிவித்துள்ளார் என்று, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் முதலில் கையெழுத்தான போது, சிரியா சர்வதேச அளவில் விலக்கப்பட்டே இருந்தது. அந்நாட்டின் மீதான தடைகள், இந்த ஆலோசனை கூட்டங்களில் சிரியா அதிகாரிகள் பங்குகொள்வதை மிகவும் கடினமாக்கின.
அதுமட்டுமில்லாமல், இந்த சந்திப்புகள், சிரியாவின் உள்நாட்டு போரில், சில உக்கிரமான சண்டைகள் நடக்கும் போது நடைபெற்றதால், அந்த நாடு , ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலையிலேயே இல்லை.
ஜூன் மாதம், இந்த ஒப்பந்தம் குறித்து தனது முடிவை அமெரிக்கா வெளியிட்ட போது, தனது நாட்டை காப்பது என்பது புனிதமான செயல்
என்றும், அமெரிக்காவிற்கு அனுகூலமற்ற நிலை இல்லாத ஒரு புதிய ஒப்பந்தத்தை தான்ஏற்க முடியாது அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த இசைவு, அமெரிக்காவில், 6.5 மில்லியன் வேலை இழப்பையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3டிரில்லியன் இழப்பையும் உருவாக்கும் என்றார். மேலும், பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கு போட்டியான சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு சாதகமான விஷயங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அக்டோபர் மாதம், நிகரகுவா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், தனது நாட்டிற்கு சாதகமான வகையில் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் கொண்டுவரவில்லை
என்றால், அமெரிக்கா விலகிக்கொள்ளும் என்றது.
இன்று வரை அந்த முடிவில் அமெரிக்காவிற்கு எந்த மாற்றமும் இல்லை என வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் கெல்லி லவ் தெரிவித்துள்ளார்.
சிரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட போவது குறித்து, சுற்றுசூழல் சார்ந்த பொதுநல அமைப்பான தி சியெர்ரா கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒன்றிணைந்து, பருவநிலை மாற்றம் குறித்த நெருக்கடியை சமாளிக்க முன்னேறி வரும் நிலையில், டிரம்ப், உலக அரங்கில் தன்னை தனித்துக்கொள்வது என்பது, அமெரிக்காவை மிகவும் இக்கட்டான மற்றும் ஆபத்தான நிலையில் நிறுத்தியுள்ளது
என்று அமெரிக்கா மீது குற்றம் சாட்டியுள்ளது.
உலகில் கிட்டத்தட்ட பாதி கரியமில வாயு வெளியேற்றத்திற்கு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவே காரணமாக உள்ளன. -BBC_Tamil