டிசம்பர் மாதம், கேட்டலோனியாவில் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தல், அங்கு நடக்கும் `பிரிவினைவாத அழிவிற்கு` ஒரு முடிவை கொண்டுவரும் என்று ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினின் நேரடி ஆட்சியை கேட்டலோனியா மீது நடைமுறைபடுத்திய பிறகு, முதல்முறையாக அங்கு சென்ற அவர், ஒரு பிரச்சார நிகழ்ச்சியில் பேசினார்.
பார்சிலோனாவில் பேசுகையில், தனது முடிவை தொடர்ந்து ஆதரிக்கும் வகையில் பேசிய அவர், கடந்தமாதம், கேட்டலோனியா அரசு, ஒருதலைபட்சமாக சுதந்திர பிரகடனம் அறிவித்த பிறகு, நல்ல முடிவுகள் கிடைப்பதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டுவிட்டன என்றார்.
இந்த நகர்விற்கு பிறகு, கேட்டலோனியாவின் பல முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
உள்ளூர் காவல்துறையின் கணக்கின்படி, இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 750,000 பேர் வரையில், பார்சிலோனாவில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஸ்பெயினின் நீதிமன்றத்தால் சட்டவிரோதமானது என்று கூறபட்ட, அக்டோபர் மாதம் கேட்டலோனியாவில் நடத்தப்பட்ட சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தரியும் வாக்கெடுப்பிற்கு பிறகு இந்த நெருக்கடி ஏற்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 43 சதவீத வாக்காளர்களில் 92 சதவிகிதம் பேர் சுதந்திரத்திற்கு சாதகமாக வாக்களித்ததாக கேட்டலன் அதிகாரிகள் தெரிவித்தனர். சுதந்திரத்திற்கு எதிராக இருந்த பலரும் வக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த கருத்தரியும் வாக்கெடுப்பின் சட்டப்பூர்வத் தன்மையை அங்கீகரிக்க அவர்கள் மறுத்தனர்.
அதை தொடர்ந்து கேட்டலன் அரசு, சுதந்திர பிரகடனம் செய்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, கேட்டலன் நாடாளுமன்றத்தை கலைத்த ஸ்பெயின் அரசு, அங்கு நேரடி ஆட்சியை செலுத்தியதோடு, டிசம்பர் 21ஆம் தேதி தேர்தலும் அறிவித்தது.
பாப்புலர் பார்ட்டிக்காக பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ரஜோய், அமைதியாக உள்ள பெரும்பான்மை
மக்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, அவர்களின் குரல்களை வாக்குகளாக மாற்றவேண்டும் என்றார்.
பிரிவினைவாத அழிவில் உள்ள கேட்டலோனியாவை நாம் நிச்சயமாக மீட்டுவரவேண்டும். ஜனநாயகத்தின் உதவியோடு, எல்லோருக்குமான கேட்டலோனியாவை நாம் மீட்டுவர வேண்டும்
என்றார் அவர்.
சரியான முடிவு, ஸ்பெயினின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த ஆண்டு, 3 சதவீதம் வரை உயர்த்தும் என்று தனது கட்சி ஆதரவாளர்களிடம் அவர் கூறினார்.
அந்த பகுதியை விட்டு நிறுவனங்கள் செல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அந்த பகுதி நிறுவனங்கள் ஸ்பெயினின் ஐந்தில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன. -BBC_Tamil