ஆங் சான் சூச்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு! கவுரவப் பட்டத்தை திருப்பித் தருகிறார் ஐரிஷ் பாடகர் கெல்டாஃப்!

மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், டப்ளின் நகர சபை தனக்கு வழங்கிய கவுரவ பட்டத்தை, தாம் திருப்பித்தர போவதாக ஐரிஷ் பாடகர் பாப் கெல்டாஃப் கூறியுள்ளார். முன்னதாக இந்த பட்டத்தை ஆங் சான் சூச்சியும் பெற்றுள்ளார்.

சூச்சிக்கும் இந்நகரத்துக்கும் உண்டான இந்த உறவு தங்களுக்கு மிகுந்த அவமானம் அளிப்பதாக அவர் கூறினார்.

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பைத் தடுக்கத் தவறியாக குற்றம் சாட்டப்பட்ட சூச்சி கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.

சமீப காலத்தில் நடந்த வன்முறையில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.

“அவருடன் வைத்திருக்கும் உறவு எங்கள் அனைவருக்கும் அவமானமாக உள்ளது. இயல்பில் உள்ள அனைத்து இணைப்புகளையும் துண்டிக்க வேண்டும். நாங்கள் அவரை கவுரவித்தோம், ஆனால் அவர் எங்களை அவமானத்திற்கு ஆளாக்கியுள்ளார்” என லைவ் எய்டின் நிறுவனர் மற்றும் பாடகரான கெல்டாஃப், தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தனது கவுரவ பட்டத்தை டப்ளின் நகர மன்றத்தில் வைத்து திருப்பித் தரப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் நடந்த ராணுவ வன்முறையை ஒப்புக்கொள்ள தயங்கிய சூச்சிக்கு சர்வதேச தலைவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஐ.நா இந்த சம்பவத்தை “இன அழிப்புக்கான எடுத்துக்காட்டு” என கூறியிருந்தது.

பாதுகாப்பு படையினருக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை சூச்சி எடுக்க வேண்டும் என, யூ2 எனப்படும் பிற ஐரிஷ் இசைக்கலைஞர்களும் வலியுறத்தியுள்ளனர்.

1997 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கவுரவப் பட்டத்தை ஆக்ஸ்ஃபோர்டு நகர மன்றம், கடந்த மாதம் சூச்சியிடமிருந்து பறித்தது.

சூச்சி அரசியல் படித்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஹ்யூக்ஸ் கல்லூரியில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படம் இந்த சம்பவத்தால் நீக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ரகைன் பகுதியில், அங்குள்ள போலீஸ் சாவடிகள் மீது ரோஹிஞ்சா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் வன்முறை வெடித்து.

இந்த வன்முறையால் பலர் கொல்லப்பட்டதோடு பல கிராமங்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரோஹிஞ்சாக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ரோஹிஞ்சா தீவிரவாதிகளுடன் மட்டுமே போராடி வருவதாகவும், பொதுமக்களை தாங்கள் தாக்கவில்லை என்றும் மியான்மர் ராணுவம் கூறியுள்ளது. -BBC_Tamil