ஜிம்பாப்வேயில் புதன்கிழமை அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது முதல் வீட்டுச் சிறையில் இருந்த அதிபர் ராபர்ட் முகாபே முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார்.
தலைநகர் ஹராரேவில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார் முகாபே.
துணை அதிபர் எம்மர்சன் மனங்கக்வா-வை கடந்த வாரம் முகாபே பதவி நீக்கம் செய்தார். தமக்குப் பிறகு அவரது ஜானு பிஎஃப் கட்சியையும் நாட்டின் அதிபர் பதவியையும் தமது மனைவி கிரேஸ் எடுத்துக்கொள்ளுவதற்காகவே அப்படிச் செய்தார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. முகாபேவைப் போலவே மனங்கக்வாவும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்.
இந்நிலையில் விடுதலைப் போராட்டப் போராட்டப் பின்புலம் உள்ளவர்கள் பதவி நீக்கப்படுவதை விரும்பவில்லை என்று ராணுவம் கூறியது.
இதையடுத்து புதன்கிழமை ஜிம்பாப்வேயின் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான இசட்.பி.சி.யை ராணுவம் கைப்பற்றியதுடன் முகாபே-வையும் வீட்டுக்காவலில் வைத்தது.
ராபர்ட் முகாபேவுடன் பேசி வருவதாகவும், அதன் முடிவு தெரிந்தவுடன் மக்களுக்குத் தெரிவிப்பதாகவும் ராணுவம் கூறியது.
முகாபே பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதை நேரில் பார்த்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கூட்டம் முகாபே பேசியவுடன் அவரை வாழ்த்தி ஆரவாரம் செய்தது என்றார். -BBC_Tamil