ஜிம்பாப்வேவில் போராட்டம் செய்துவரும் மக்கள், முகாபே பதவி விலக வேண்டும் எனக்கோரி அதிபர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
புதன்கிழமை, ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை ராணுவம் கையில் எடுத்தது முதல், நாட்டின் தலைநகரான ஹராரே மற்றும் பிற நகரங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள், ராணுவ வீரர்களை கட்டிப்பிடித்து வாழ்த்துவதாகவும், உற்சாகமாகப் பாராட்டுவதாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
பிபிசியிடம் பேசிய ஒருவர், இது புதிய துவக்கம்
என்றார்.
இந்தப் பேரணி, ராணுவம் மற்றும் ஆளும் ஜானு-பி எஃப் கட்சியினரால் நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு வரையில், முகாபேவின் பக்கமிருந்த, முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூட, தற்போது அவர் பதவி விலக வேண்டும் என்கின்றனர்.
முகாபே மீண்டும் பதவிக்கு வரவே முடியாது என்று ஹராரேவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
பேரணியில் கலந்துகொண்டவர் கூறுகையில், “ஜிம்பாப்வே குடிமக்களாக, அமைதியான தலையீடு செய்ததற்காக எங்களின் ராணுவத்திற்கு நாங்கள் மிக்க நன்றிகள் தெரிவித்துகொள்கிறோம்.
ஜிம்பாப்வே மக்கள் தற்போது, முகாபே விலக வேண்டும், நேற்றைப்போல அவர் சென்றுவிட வேண்டும். அவர் திரும்பிச் செல்வதை பார்க்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எங்களுக்கு இது புதிய துவக்கம்.
எங்களுக்கு, சர்வாதிகார ஆட்சி முடிவடைந்துள்ளது. எங்களின் ஜிம்பாப்வேவை நாங்கள் மீண்டும் பெறுகிறோம்”.
புதன்கிழமை, ராணுவம் நாட்டை கட்டுப்பாட்டில் எடுத்தது முதல், 93 வயதாகும் முகாபே, வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், வெள்ளிக்கிழமை, கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிலும், கல்லூரி துணைவேந்தர் என்ற முறையில், அவர் பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்து பேசினார்.
கிரேஸ் முகாபே இதில் பங்கேற்கவில்லை. அவர் நாட்டைவிட்டு சென்றுவிட்டார் என்று எண்ணப்பட்டது. வியாழக்கிழமை, முகாபேவுடன் அவர் வீட்டில் இல்லை என்று தெரியவந்தது.
பதவிக்கான போராட்டத்திற்குப் பிறகு, 37 ஆண்டுகளாக அந்நாட்டை ஆண்டுவரும் முகாபேவிற்கு எதிராக இந்த நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது.
தனது மனைவியும், தன்னைவிட 40ஆண்டுகள் சிறியவருமான கிரெஸ் முகாபே, அடுத்த அதிபர் ஆவதற்கு வழிவகுப்பதற்காக, நாட்டின் துணை அதிபரான எமர்சன் மனங்காக்வுவாவை கடந்த வாரம், பதவியிலிருந்து நீக்கினார் முகாபே.
முகாபேவுடன் பேசிக்கொண்டிருப்பதாக கூறும் ராணுவம், இந்த பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்பது குறித்து விரைவில் மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் தெரிவித்தது.
1980இல், பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல், முகாபே ஜிம்பாப்வேவை ஆட்சி செய்து வருகிறார்.
ஹராரேவில் போராடுபவர்கள் யார்?
முன்னாள் ராணுவ வீரர்களின் அமைப்பின் தலைவரான கிரிஸ்டஃபர் மட்ஸ்வாங்வா இந்த வாரத்தின் துவக்கத்தில் ஒரு பேரணியைந் நடத்தினார்.
“நமது பெருமையை நாம் மீட்கவேண்டும். ராணுவம் ஆரம்பித்ததை நாளை நாம் முடிக்க வேண்டும்”
“முகாபேவிற்கு வேறு வழியே இல்லை. அவர் பதவி விலகியே ஆகவேண்டும்” என்றார்.
இதற்கிடையில், ஜானு-பி.எஃப் கட்சியின் பத்தில் எட்டு மாநில கிளையும், முகாபே அதிபர் பதவியிலிருந்தும், கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், பல்வேறு பிராந்திய தலைவர்களும், தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றி, முகாபே பதவி விலகவேண்டும் என்றனர்.
கிரேஸ் முகாபேவும் கட்சியிலிருந்து பதவி விலக வேண்டும் என்ற அவர்கள், எமர்சன் மீண்டும் கட்சியின் மத்திய குழுவில் சேர்க்கப்பட வேண்டும் என்றனர்.
கட்சி உறுப்பினர்கள், துணை நிற்க முடிவு செய்ததோடு, சனிக்கிழமை பேரணிக்கும் ஆதரவு அளித்தனர். இந்த நெருக்கடி குறித்து பேச, அக்கட்சி, சிறப்பு மத்திய குழு கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டு வருகிறது.
பிபிசியின் ஆனி சோய், தற்போது அக்கட்சியின் ஆதரவாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உள்நாட்டு சமூகத்தினரின் இந்த நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையிலானது என்கிறார்.
இந்த பேரணி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜிம்பாப்வே பாதுகாப்புப்படை, இந்த பேரணி குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் தங்களை அணுகியதாகவும், இதை ஒரு ஒற்றுமைக்கான பேரணி
என்று அவர்கள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தது.
“இந்த பேரணி, அமைதியாகவும், ஒழுக்கமாகவும், வெறுப்பு சொற்கள் இல்லாமல், எந்த வன்முறையும் நடக்காமல் நடைபெற்றால், எங்களின் முழு ஆதரவு இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.
அதிபரை எதிர்த்த கிளர்ச்சியாளர்கள் குழுவும் இந்த பேரணியை ஆதரித்தது. -BBC_Tamil