ஆளும் கட்சியான ஜிம்பாப்வே ஆஃப்ரிக்கன் நேஷனல் யூனியன் – பாட்ரியாடிக் ஃப்ரண்ட் (ஜானு பி எஃப்) சேர்ந்த முன்னாள் துணை அதிபரான எமர்சன் மனங்காக்வாவை ஜிம்பாப்வே நாட்டின் தலைவராக ராணுவம் நியமித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு 93 வயதான முகாபே, எமர்சனை துணை அதிபர் பதவியிலிருந்து நீக்கினார். அவருடைய இடத்தில் தனது மனைவி கிரேஸை நியமிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதன் நீட்சியாகதான் ராணுவம் ஜிம்பாப்வே ஆட்சியை கைப்பற்றி முகாபேவை வீட்டுக்காவலில் வைத்தது.
இந்த சம்பவத்திற்கு முன்பாக, ஒரு கத்தோலிக்க பாதிரியார் முகாபேவுக்கும், ராணுவத்துக்கும் மத்தியஸ்தம் செய்வதாக அரசு தொலைக்காட்சி கூறியது.
இதற்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஜிம்பாப்வே 1980-ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து முகாபே அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.
ராணுவம் ஆட்சியைக் கையில் எடுத்ததைக் கொண்டாடும் விதமாக, சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், முகாபே பதவி விலக வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர். -BBC_Tamil