ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், வெற்றி பெற்றதாக ஈரான் அறிவிப்பு..!

ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசமாக்கிக்கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்தவாறு அண்டை நாடான சிரியாவின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தனர். உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றியுள்ள இந்த இயக்கம் மிக மோசமான தீவிரவாத அமைப்பாக கருத்டப்பட்டது.

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைகள், ரஷ்யா மற்றும் ஈரான் நாட்டு ராணுவம் களமிறங்கி வேட்டையாடி வருகிறது. படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் பிடியில் இருந்த நகரங்கள் மீட்டெடுக்கப்பட்டது.

தற்போது, மிகவும் குறுகிய பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் சுருங்கி விட்டதாகவும், அவர்களில் பலர் சரணடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி அரசு தொலைக்காட்சியில் நேரடியாக மக்களுக்கு அறிவித்தார். சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் அதிபர் அல் ஆசாத் படைக்கு ஈரான் ராணுவம் பக்க பலமாக செயல்பட்ட நிலையில், அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி விட்டதாகவும், அவர்களும் விரைவில் அழிக்கப்படுவார்கள் எனவும் ரூவானி தனது பேச்சில் குறிப்பிட்டார். ஈரான் புரட்சி காவலர்கள் படையின் மேஜர் ஜெனரல் குவசம் சோலிமணியும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த போரில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் நன்றி கூறிக்கொள்வதாக குவசம் சோலொமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.com