கியூபாவும் வடகொரியாவும் இணைந்து, ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. ஐ.அமெரிக்காவின் “ஒருதலைப்பட்சமானதும் தன்னிச்சையானதுமான” கோரிக்கைகளை இரு நாடுகளும் நிராகரிக்கின்றன என, கியூப வெளிநாட்டு அமைச்சுத் தெரிவித்தது.
கியூபாவின் தலைநகர் ஹவானாவில், இரு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களும் சந்தித்துப் பேசினர்.
தனது அணுவாயுதத் திட்டத்துக்காக ஐக்கிய அமெரிக்காவிடமிருந்தும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் எழுந்துள்ள எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கு, தோழமை நாடுகளை, வடகொரியா தேடிவருகிறது.
கியூபாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில், 1960ஆம் ஆண்டிலிருந்து இராஜதந்திர உறவுகள் பேணப்பட்டு வருகின்றன. அணுவாயுதத்தை எதிர்க்கின்ற நாடாகக் கியூபா இருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிரான அதன் நிலைப்பாடு காரணமாக, வடகொரியாவுடன் ஓரளவு உறுதியான இராஜதந்திர உறவைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், ஹவானாவில் சந்தித்த இரு அமைச்சர்களும், நடப்பு அரசியல் தொடர்பாகக் கலந்துரையாடினர். கலந்துரையாடலின் பின்னர் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “மக்களின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும்” எனவும், “முரண்பாடுகளுக்கு இணக்கமான தீர்வுகள் வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.அமெரிக்காவின் நடவடிக்கைகளை இரு அமைச்சர்களும் விமர்சித்தனர் என்று தெரிவித்த அவ்வறிக்கை, சர்வதேச சட்டத்துக்கு எதிரான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் குற்றச்சாட்டினர்.
கொரியத் தீபகற்பத்தின் பிரச்சினையென்பது ஒருபக்கமாக இருக்க, ஐ.அமெரிக்காவுக்கும் கியூபாவுக்குமிடையிலான உறவு, தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கின்றமையும், இச்சந்திப்புக்கும் இவ்வறிக்கைக்கும் காரணமெனக் கருதப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில், கியூபாவுடனான உறவுகளை மீளக்கட்டியெழுப்புவதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இராஜதந்திர உறவுகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கியூபா மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டவராகக் காணப்படுகிறார். அதனால், முன்னாள் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் பலவற்றை, அவர் வாபஸ் பெற்று வருகிறார்.
எனவே, அமெரிக்க எதிர்ப்பு என்ற புள்ளியில், கியூபாவும் வடகொரியாவும் ஒன்றிணைந்து, தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளன.
-tamilmirror.lk