ஹராரே,
ஜிம்பாப்வே, 1980-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல், கடந்த 37 ஆண்டுகளாக அந்த நாட்டில் ஆட்சி நடத்தி வந்தவர் ராபர்ட் முகாபே (வயது 93). அவரது அதிகாரத்தை கடந்த 15-ந் தேதி ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டு மக்களும், முகாபேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். நெருக்கடி முற்றிய நிலையில் அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட துணை அதிபர் எமர்சன் மனன்காக்வா, புதிய அதிபராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.அதன்படி ஹராரே நகரில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் அவர் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு வயது 75. அரசியல் சாசனத்தை நிலை நிறுத்தப்போவதாகவும், ஜிம்பாப்வேயின் 1 கோடியே 60 லட்சம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கப்போவதாகவும் அவர் சூளுரைத்தார். இந்த புதிய ஆட்சி மாற்றம், ஜிம்பாப்வேயின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துமா, வேலையில்லா திண்டாட்டம் முடிவுக்கு வருமா, பண வீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படுமா என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.
-dailythanthi.com