எகிப்தில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு ஆயுதக்கிடங்குகள் அழிப்பு

கெய்ரோ,

எகிப்தில் மசூதி தாக்குதலுக்கு விமானப்படை பதிலடி கொடுக்கும் விதமாக வான்தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டன.

எகிப்து நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் இயங்கிக்கொண்டு, நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ தேவாலயங்களையும், பாதுகாப்பு படையினரையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அங்கு சினாய் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள பீர் அல் அபெத் நகரில் அல் ராவ்டா மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, மிகவும் சக்தி வாய்ந்த குண்டை வெடித்தும், வாகனங்களில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியும் அதிபயங்கர தாக்குதல்களை நடத்தி நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தனர்.

எகிப்தின் வரலாற்றில் கரும்புள்ளியாகி விட்ட இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 235 பேர் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று 305 ஆக உயர்ந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளையெல்லாம் உலுக்கி விட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. சபையும், பாதுகாப்பு சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை சர்வதேச சமூகம் சகித்துக்கொள்ளாது; பயங்கரவாதத்தை முழு சக்தியுடன் வீழ்த்த வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

இந்த தாக்குல்களை தொடர்ந்து உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி மசூதி தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ஒழிப்பதுபற்றி அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார். அப்போது அவர், “பயங்கரவாதிகளுக்கு மிருகத்தனமான சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும். மசூதியில் தாக்குதல் நடத்தியவர்கள் வீழ்த்தப்படுவார்கள்.” என்று சூளுரைத்தார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் கைவரிசையாகவே இது இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தை தொடர்ந்து, விமானப்படையினர் வான்தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் இலக்குகளை முற்றிலுமாய் அழிக்கும்படி அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி உத்தரவிட்டார்.

மேலும் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான 235 பேருக்கு நினைவுச்சின்னம் ஒன்றை அமைக்குமாறு அவர் ஆணையிட்டார்.

அதிபரின் உத்தரவை அடுத்து பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களை குறிவைத்து விமானப்படையினர் தீவிர வான்தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் சாவடிகள் அழிக்கப்பட்டன. அவர்களின் ஆயுதக்கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன. வாகனங்கள் உரு தெரியாமல் நாசமாக்கப்பட்டன. வாகனங்களில் அமர்ந்திருந்த பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இதை எகிப்து ராணுவ செய்தி தொடர்பாளர் டாமர் ரிபாய் நேற்று உறுதி செய்தார்.

-dailythanthi.com