பாகிஸ்தான்: கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை கலைக்க ராணுவ நடவடிக்கை இல்லை

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நெடுஞ்சாலையை முடக்கிப் போராடிவரும் கடும்போக்கு இஸ்லாமியர்களை ஒடுக்க, படைகளைப் பயன்படுத்த வேண்டாம் என பாகிஸ்தான் அரசும் ராணுவமும் முடிவு செய்துள்ளது.

சனிக்கிழமையன்று போராட்டக்காரர்களை கலைப்பதில் போலீஸ் தோல்வியடைந்ததையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான் அரசு ராணுவத்தை அழைத்தது.

இப்பிரச்சனையைத் தீர்த்துவைக்க கடும்போக்கு இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க, பிரதமர் ஷாகித்கான் அப்பாசியும், ராணுவத் தளபதி கமர் ஜவேத் பாஜ்வாவும் முடிவு செய்துள்ளனர்.

பல வாரங்களாக இங்குப் போராட்டம் நடந்து வருகிறது.

சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத், மத நிந்தனைச் செய்ததாக குற்றம்சாட்டும் போராட்டக்காரர்கள் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி ஃபாசியாபாத் நெடுஞ்சாலையை முடக்கியுள்ளனர்.

லாகூர், தெற்கு கராச்சி உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் பரவியுள்ளன.

சனிக்கிழமையன்று, போலீஸுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் என நம்பப்படுகிறது. 200 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்லாமாபாதில் ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் பல மோதல்கள் நடந்தன. போராட்டங்களைக் கட்டுப்படுத்த, துணை ராணுவப்படையினை அரசு அழைத்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

யு டியூப் , பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்கள், உள்ளூர் செய்தி சேனல்கள் மற்றும் இணையதளத்தில் நேரலைச் செய்யும் வசதி ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் சீர்திருத்தச் சட்டம் 2017ல் செய்யப்பட்ட திருத்தத்துக்கு எதிராக இப்போராட்டம் தொடங்கியது.

இந்த சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய ஓர் உறுதிமொழியில் முகமது நபியே இறைவனின் கடைசி தூதர் என்று குறிப்பிடும் பழைய வாசகம் ஒன்று விடுபட்டிருந்தது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த வாசகம் விடுபட்டது இஸ்லாமிய மறுப்பு எனவும், மத நிந்தனை எனவும் விமர்சிக்கப்பட்டது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத்தை பதவி நீக்கவேண்டும் என்று கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்பான டெஹ்ரீக்-ஐ-லபைக் யா ரசூல் அல்லா கட்சியின் அஷ்ரஃப் ஜலாய் அணியும், சுன்னி டெஹ்ரீக் அமைப்பும் கோரி வருகின்றன.

கவனத்துக்கு வந்தவுடனேயே இந்தப் பிழையினை சரி செய்யப்பட்டுவிட்டதாக அரசு விளக்கமளித்தாலும், இதை கடும்போக்காளர்கள் ஏற்கவில்லை. -BBC_Tamil