ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அங்குள்ள ஹவுத்தி இன மக்கள் ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.
ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஹவுத்தி படைகளுக்கு எதிராக ஏமன் நாட்டு தலைநகரான சனா நகரில் தற்போது உச்சகட்டப் போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அபுதாபி நாட்டின் மேற்கு பகுதியில் அமைக்கப்படும் பராக்கா அணு மின்சார நிலையத்தை நோக்கி இன்று ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி போராளிகள் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியா நாட்டின் எல்லையோரம் அபுதாபி நாட்டின் மேற்கில் உள்ள பாலைவனப் பகுதியில் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டு வரும் அணு மின்சார நிலையத்தை நோக்கி இன்று ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ள ஹவுத்தி போராளிகளின் அறிக்கைக்கு அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் மறுப்போ, விளக்கமோ இன்னும் அளிக்கப்படவில்லை.